பெண்ணை கொன்று நகை கொள்ளையடித்த வழக்கில் மேலும் ஒருவருக்கு ஆயுள் தண்டனை


பெண்ணை கொன்று நகை கொள்ளையடித்த வழக்கில் மேலும் ஒருவருக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 13 July 2018 10:45 PM GMT (Updated: 13 July 2018 9:14 PM GMT)

நமணசமுத்திரம் அருகே பெண்ணை கொன்று நகை கொள்ளையடித்த வழக்கில் மேலும் ஒரு வருக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம், நமணசமுத்திரம் அருகே உள்ள நெய்வாசல்பட்டியை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி பொற்கொடி(வயது 45). இவர் கடந்த 4.11.2004-ந் தேதி இரவு வீட்டில் தனியாக இருந்தபோது, வீட்டிற்குள் புகுந்த 6 பேர் கொண்ட கும்பல் பொற்கொடியின் வாயில் துணியை வைத்து அமுக்கி அவரை கொலை செய்து விட்டு, அவர் அணிந்திருந்த சுமார் 30 பவுன் நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்று விட்டனர்.

இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் நமணசமுத்திரம் போலீசார் அரிமளம் அருகே உள்ள வடக்கிப்பட்டியை சேர்ந்த ஜெயராஜ் (56) உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 5 பேரை கைது செய்தனர். இதில் ஜெயராஜ் என்பவர் தலைமறைவாகி விட்டார். இந்த வழக்கு புதுக்கோட்டை கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, பொற்கொடியை கொலை செய்து, நகைகளை கொள்ளையடித்த குற்றத்திற்காக 5 பேருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.

மேலும் தலைமறைவாக உள்ள ஜெயராஜை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்த வேண்டும் என நமணசமுத்திரம் போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து நமணசமுத்திரம் போலீசார் தலைமறைவாக இருந்த ஜெயராஜை கைது செய்து, புதுக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி இளங்கோவன் நேற்று தீர்ப்பு கூறினார். அப்போது பொற்கொடியை கொலை செய்து, நகைகளை கொள்ளையடித்து சென்ற ஜெயராஜூக்கு ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.

Next Story