ரேஷன் கடை விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


ரேஷன் கடை விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 13 July 2018 10:28 PM GMT (Updated: 13 July 2018 10:28 PM GMT)

அரக்கோணம் அருகே ரேஷன் கடை விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அரக்கோணம்,

அரக்கோணம் அருகே பெருங்களத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பூபதி என்பவரின் மனைவி சந்தியா (வயது 21). இவர் நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார். அப்போது கடை விற்பனையாளர் செல்வம் (50) என்பவர் அவரிடம் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் செல்வத்தை அடித்து கடைக்குள் கட்டி வைத்தனர். இதையடுத்து அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு குத்தாலிங்கம், சப்-இன்ஸ்பெக்டர்கள் விநாயகம், ரபேல்லுயிஸ், வட்ட வழங்கல் அலுவலர் குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று செல்வத்தை மீட்டு வந்தனர்.

இந்த சம்பவம் குறித்து பூபதி அரக்கோணம் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் 3 பிரிவுகளில் வழக்குபதிவு செய்து விற்பனையாளர் செல்வத்தை கைது செய்தனர். இந்த நிலையில் நேற்று பெருங்களத்தூர் கிராமத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அரக்கோணம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பெருங்களத்தூர் கிராமத்தில் பெண்ணிடம் தவறாக நடந்த விற்பனையாளர் செல்வத்தை பணியில் இருந்து நீக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். முற்றுகையிட்டவர்களிடம் தலைமையிடத்து தாசில்தார் ரேவதி, வட்ட வழங்கல் அலுவலர் குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். உங்கள் கோரிக்கை குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கிறோம். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். அதன்பின்னர் முற்றுகையிட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Next Story