ஓட்டப்பிடாரம் அருகே பரபரப்பு வீடு புகுந்து 13½ பவுன் நகை திருடிய வாலிபர் பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்


ஓட்டப்பிடாரம் அருகே பரபரப்பு வீடு புகுந்து 13½ பவுன் நகை திருடிய வாலிபர் பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்
x
தினத்தந்தி 15 July 2018 2:30 AM IST (Updated: 14 July 2018 6:14 PM IST)
t-max-icont-min-icon

ஓட்டப்பிடாரம் அருகே வீடு புகுந்து 13½ பவுன் நகை திருடிய வாலிபரை பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஓட்டப்பிடாரம், 

ஓட்டப்பிடாரம் அருகே வீடு புகுந்து 13½ பவுன் நகை திருடிய வாலிபரை பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

நகைகள் திருட்டு

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள ஆதநூர் கிராமத்தை சேர்ந்தவர் மொட்டைசாமி (வயது 40). கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் நடந்து வரும் காளியம்மன் கோவில் விழாவை பார்ப்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்தினருடன் கோவிலுக்கு சென்றார்.

இதனை நோட்டமிட்ட அதே பகுதியை சேர்ந்த முனீசுவரன் என்பவரின் மகன் சோலைசாமி (24), மொட்டைசாமியின் வீட்டு கதவை உடைத்து நைசாக உள்ளே புகுந்தார். பின்னர் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 4 தங்க சங்கிலிகள், 8 மோதிரங்கள், 3 ஜோடி கம்மல்கள் உள்பட 13½ பவுன் தங்க நகைகளை திருடிக்கொண்டு வெளியே வந்தார்.

தர்மஅடி

அப்போது அங்கு வந்த மொட்டைசாமியின் மகன் உதயகுமார் (13), தனது வீட்டில் இருந்து சோலைசாமி வெளியே செல்வதை பார்த்தான். பின்னர் அவன் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த நகைகள் திருடப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து அவன் உடனடியாக கோவிலில் இருந்த தனது தந்தை மற்றும் உறவினர்களிடம் தெரிவித்தான். உடனே அவர்கள் ஊர் மக்களுடன் சேர்ந்து சோலைசாமியை தேடினர். அப்போது ஊருக்கு வெளியே சேத்தழை சாலையில் சென்று கொண்டிருந்த சோலைசாமியை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து தர்மஅடி கொடுத்தனர்.

கைது

பின்னர் அவரை எப்போதும்வென்றான் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து சோலைசாமியை கைது செய்தனர். போலீசாரின் விசாரணையில், சோலைசாமி மீது எப்போதும்வென்றான், எட்டயபுரம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் பல கொள்ளை வழக்குகள் பதிவாகி இருப்பது தெரியவந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீடு புகுந்து நகை திருடிய வாலிபர் பிடிபட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story