விருதுநகரில் மருத்துவக்கல்லூரி தொடங்க வேண்டும், முதல் அமைச்சருக்கு கோரிக்கை


விருதுநகரில் மருத்துவக்கல்லூரி தொடங்க வேண்டும், முதல் அமைச்சருக்கு கோரிக்கை
x
தினத்தந்தி 15 July 2018 3:30 AM IST (Updated: 14 July 2018 7:49 PM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் விருதுநகரில் மருத்துவக்கல்லூரி தொடங்க முதல்–அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

விருதுநகர்,

தென் தமிழகத்தில் மதுரை, சிவகங்கை, தேனி, தூத்துக்குடி, நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரி தொடங்கப்படவில்லை. விருதுநகர் மாவட்டத்தை பொருத்தமட்டில் பள்ளி கல்வியில் கால் நூற்றாண்டுக்கு மேல் மாநில அளவில் சாதனை படைத்து வரும் நிலையில், உயர் கல்வி துறையிலும் தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகளும், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும் உள்ள நிலையில் அரசு கல்லூரிகள் ஏதும் தொடங்கப்படவில்லை. பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் செயல்பட்ட போதிலும் அவற்றின் செயல்பாடு எதிர்பார்த்த அளவுக்கு இல்லாத நிலையே நீடிக்கிறது.

கடந்த 2016–ம் ஆண்டு விருதுநகரில் மருத்துவக்கல்லூரி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு வந்த நிலையில் சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியானதால் அந்த அறிவிப்பு செயல்பாட்டுக்கு வாராமலே போய்விட்டது. இதனை தொடர்ந்து மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா தென் மாவட்டங்களில் பல் மருத்துவக்கல்லூரி தொடங்கப்படும் என்று அறிவித்தார். இந்த பல் மருத்துவக்கல்லூரியை விருதுநகரில் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில் முதல்–அமைச்சரால் விருதுநகரில் பல் மருத்துவக்கல்லூரி தொடங்கப்படும் என்றும், இதற்காக ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியாகி நீண்ட நாட்கள் ஆகியும் இந்திய மருத்துவக்கல்லூரியின் விதிமுறைப்படி மருத்துவக்கல்லூரி இல்லாமல் பல் மருத்துவக்கல்லூரி மட்டும் தொடங்க அனுமதி வழங்கப்படுவது இல்லை என்பதால் பல் மருத்துவக்கல்லூரி திட்டமும் செயல்பாட்டுக்கு வராமல் முடக்கம் அடைந்துள்ளது.

சமீபத்தில் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு வந்திருந்த துணை குடியரசு தலைவர் வெங்கையாநாயுடு மருத்துவக்கல்வியின் தரத்தையும், சேவையையும் பாராட்டியதோடு, மாவட்டந்தோறும் மருத்துவக்கல்லூரி தொடங்கப்படும் என்று தெரிவித்தார். மத்திய அரசின் நிதி ஆயோக் கூட்டத்தின்போது விருதுநகரில் மருத்துவக்கல்லூரி தொடங்க மத்திய அரசு உதவ வேண்டும் என்ற கோரிக்கை முதல்–அமைச்சரால் வலியுறுத்தப்பட்டது. விருதுநகர் மாவட்டம் மத்திய அரசால் முன்னேற துடிக்கும் மாவட்டமாக அறிவிக்கப்பட்ட நிலையில் இம்மாவட்டத்தில் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மருத்துவக்கல்லூரியையும் அதற்கு இணைப்பாக முதல்–அமைச்சர் அறிவித்த பல் மருத்துவக்கல்லூரியையும் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்–அமைச்சருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த ஆண்டு சிவகாசியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவின் போது சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்றும், வத்திராயிருப்பு தனி தாலுகாவாக அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதே போன்று இம்மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளை தரம் உயர்த்த ரூ.9 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. பல்வேறு முக்கிய சாலைகள் சீரமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அறிவிக்கப்பட்ட திட்டங்களை விரைவுப்படுத்த முதல்–அமைச்சர் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இத்துடன் விருதுநகர்–சாத்தூர் இடையே 2,000 ஏக்கர் நிலப்பரப்பில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க நிலம் கண்டறியப்பட்டு கையகப்படுத்தும் நடவடிக்கை முடக்கம் அடைந்துள்ளது. மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட இந்த தொழிற்பேட்டையினை அமைக்க முதல்–அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மதுரை–தூத்துக்குடி இடையே அருப்புக்கோட்டை வழியாக அகல ரெயில் பாதை அமைக்கும் திட்டப்பணிக்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.


Next Story