வீட்டு வேலைகள் செய்ய வலியுறுத்தி இளம்பெண்ணை அடித்து கொடுமைப்படுத்திய கணவர் கைது


வீட்டு வேலைகள் செய்ய வலியுறுத்தி இளம்பெண்ணை அடித்து கொடுமைப்படுத்திய கணவர் கைது
x
தினத்தந்தி 15 July 2018 4:45 AM IST (Updated: 15 July 2018 12:10 AM IST)
t-max-icont-min-icon

வீட்டு வேலைகள் செய்ய வலியுறுத்தி இளம்பெண்ணை அடித்து உதைத்து கொடுமைப்படுத்திய கணவரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான மாமியாரை தேடி வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் அருகே உள்ள எகுமதுரை கிராமத்தைச்சேர்ந்தவர் அஜீத்குமார்(வயது 23). இவர், ஆந்திர மாநிலம் சூளூர்பேட்டையில் தனியார் நிறுவனம் ஒன்றில் ஜெ.சி.பி. டிரைவராக வேலை செய்து வருகிறார்.

இவருடைய மனைவி மாரியம்மாள்(21). இவர்களுக்கு யோகிதா என்ற 11 மாத பெண் குழந்தை உள்ளது. இவர்களுடன் அஜீத்குமாரின் தாயார் ஜானகி வசித்து வருகிறார்.

இந்தநிலையில் அஜீத்குமார், அவருடைய தாயார் ஜானகி இருவரும் சேர்ந்து மாரியம்மாளை வீட்டு வேலைகள் செய்ய வலியுறுத்தி அடித்து, உதைத்து கொடுமைப்படுத்தியதுடன், கொலை மிரட்டலும் விடுத்தனர்.

இதனால் மனம் உடைந்த அவர், அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். ஆனால் அந்த கிணற்றில் தண்ணீர் இல்லாததால் அவரது இடுப்பு எலும்பில் முறிவு ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுபற்றி அவர், ஆரம்பாக்கம் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையில் ஆரம்பாக்கம் போலீசார் கொலை மிரட்டல் உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மாரியம்மாளின் கணவர் அஜீத்குமாரை நேற்று கைது செய்தனர். தலைமறைவான மாமியார் ஜானகியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story