பொன்மலை ரெயில்வே பணிமனையில் மின்சார என்ஜின் பராமரிப்பதற்கான முதற்கட்ட பணிகள் தொடக்கம்


பொன்மலை ரெயில்வே பணிமனையில் மின்சார என்ஜின் பராமரிப்பதற்கான முதற்கட்ட பணிகள் தொடக்கம்
x
தினத்தந்தி 15 July 2018 4:30 AM IST (Updated: 15 July 2018 12:42 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனையில் மின்சார என்ஜின் பராமரிப்பதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியது.

திருச்சி,

திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனை மிக பழமை வாய்ந்தது. இங்கு டீசல் என்ஜின்களை பராமரிக்க தனி பணிமனை உள்ளது. இங்கு டீசல் என்ஜின் பராமரிப்பு மற்றும் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் ஒரு வகை டீசல் என்ஜினில் இருந்து மற்றொரு வகை டீசல் என்ஜினாகவும் மாற்றப்படுகிறது. ஊட்டி மலை ரெயிலுக்கான என்ஜின்கள் ஏற்கனவே இங்கிருந்து தயாரித்து அனுப்பப்பட்டுள்ளன. மேலும் சில என்ஜின்கள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.

வட மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ரெயில் என்ஜின் புனரமைத்து அனுப்பப்பட்டுள்ளன. இந்த நிலையில் ரெயில்வேயில் தற்போது பாதைகள் மின்மயமாக்கப்பட்டு வருகின்றன. இதனால் டீசல் என்ஜினுக்கு பதிலாக மின்சார என்ஜின்கள் பொருத்தப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன. மின்சார என்ஜின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் இதனை பராமரிப்பதற்கான பணிமனைகள் ஆங்காங்கே சிறிய அளவில் மட்டுமே உள்ளன.

இந்த நிலையில் பொன்மலை பணிமனையில் மின்சார என்ஜின் பராமரிப்பதற்கான பணிகளை தொடங்க ரெயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், “டீசல் என்ஜின் மட்டுமே பராமரிக்கப்பட்டு வருகிற நிலையில் எதிர்கால தேவையை கருதி மின்சார என்ஜின் பராமரிப்பையும் மேற்கொள்ள ரெயில்வே உத்தரவிட்டுள்ளது. பொன்மலையில் இருந்து டீசல் ஷெட்டிற்கு மின்சார என்ஜின்களை கொண்டுவருவதற்கான மின்பாதைகள் முதற்கட்டமாக அமைக்கப்பட உள்ளது. இதற்கான ஆய்வு பணிகள் நடந்து வருகிறது. மேலும் மின்சார என்ஜினை பராமரிக்க தேவையான உபகரணங்கள் குறித்தும் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகின்றன. பணிமனையில் என்ஜின்களை நிறுத்த வசதி யாகவும் இட அமைப்பும் ஏற்படுத்தப்பட உள்ளது. இந்த பணிகள் அனைத்தும் ஓராண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது” என்றனர். 

Next Story