வழிப்பறி கொள்ளையர்களை பிடிக்க முயன்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு சரமாரி கத்திக்குத்து; 2 பேர் கைது


வழிப்பறி கொள்ளையர்களை பிடிக்க முயன்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு சரமாரி கத்திக்குத்து; 2 பேர் கைது
x
தினத்தந்தி 15 July 2018 5:00 AM IST (Updated: 15 July 2018 2:02 AM IST)
t-max-icont-min-icon

ராயபுரம் பகுதியில் வழிப்பறி கொள்ளையர்களை பிடிக்க முயன்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு சரமாரியாக கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக 2 பேரை போலீசார் பிடித்து கைது செய்தனர்.

திருவொற்றியூர்,

ராயபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் (வயது 30) நேற்று முன்தினம் இரவு 2 போலீசாருடன் ரோந்து சென்றார்.

அப்போது ராயபுரம் சிக்னல் கல்லறை சாலை சந்திப்பில் குடிபோதையில் வழிப்பறி கொள்ளையர்கள் 2 பேர் கத்திமுனையில் தகராறில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதாக ரோந்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதைத் தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அங்கு தகராறில் ஈடுபட்ட 2 பேரையும் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் பிடித்து போலீஸ் வாகனத்தில் ஏற்ற முயன்றார்.

அப்போது அதில் ஒருவன் திடீரென்று சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் கையில் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓட முயன்றான். இதில் சப்-இன்ஸ்பெக்டர் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் அவர்களில் ஒருவருக்கும் காயம் ஏற்பட்டது.

கத்திக்குத்தில் காயம் அடைந்து ரத்தம் வழிந்த நிலையிலும் சக போலீசார் உதவியுடன் தகராறில் ஈடுபட்ட 2 பேரையும் சப்-இன்ஸ்பெக்டர் பிடித்தார். பின்னர் அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். கத்திக்குத்தில் காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் ராஜாராபர்ட் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் பிடிபட்ட 2 பேரும் பழைய வண்ணாரப்பேட்டை கல்லறை சாலை பகுதியை சேர்ந்த தயாளன் (30), கார்த்திக் (29) என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

இதில் தயாளன் மீது வண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் வழிப்பறி, திருட்டு என 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது

இதனையடுத்து தயாளனை போலீசார் புழல் சிறையில் அடைத்தனர். கைதான கார்த்திக்கிற்கு காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Next Story