ரூ.1 கோடி மதிப்பில் 8 புதிய கட்டிடங்கள் அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார்


ரூ.1 கோடி மதிப்பில் 8 புதிய கட்டிடங்கள் அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 15 July 2018 4:15 AM IST (Updated: 15 July 2018 3:51 AM IST)
t-max-icont-min-icon

பரமத்தி, கபிலர்மலை, மோகனூர் பகுதிகளில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட 8 கட்டிடங்களை அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார்.

பரமத்தி வேலூர்,

நாமக்கல் மாவட்டம் பரமத்தி, கபிலர்மலை, மோகனூர் வட்டாரங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்்்பணிகளின் கீழ் புதிதாக கட்டப்பட்ட கட்டிடங்களின் திறப்பு விழா மற்றும் புதிய வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கான பூமிபூஜை நிகழ்ச்சிகள் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமையில் நடந்தது.

இவ்விழாக்களுக்கு நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம், சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சிகளில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி கலந்துகொண்டு கட்டிடங்களை திறந்து வைத்தார்.

கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம் சோழசிராமணி ஊராட்சியில் ரூ.11.80 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கூடுதல் கட்டிடம், ஜமீன் இளம்பள்ளி ஊராட்சியில் ரூ.14.55 லட்சத்தில் கட்டப்பட்ட கிராம ஊராட்சி சேவை மைய கட்டிடம், பரமத்தி ஊராட்சி ஒன்றியம் கூடச்சேரி ஊராட்சியில் ரூ.30 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள அம்மா பூங்கா மற்றும் அம்மா நவீன உடற்பயிற்சி கூடம், பிராந்தகம் ஊராட்சியில் ரூ.15 லட்சத்தில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் ஆகியவற்றை அமைச்சர் திறந்து வைத்தார்.

இதேபோல நல்லியம்பாளையம் ஊராட்சியில் ரூ.11.80 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கான 2 கூடுதல் வகுப்பறை கட்டிடம், மோகனூர் ஊராட்சி ஒன்றியம் செங்கம்பள்ளி ஊராட்சியில் ரூ.8.50 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடம், கொமராபாளையம் ஊராட்சி தொடக்கப்பள்ளியில் ரூ.3.50 லட்சத்தில் கட்டப்பட்ட வைப்பறையுடன் கூடிய புதிய சமயலறை கட்டிடம், எஸ்.வாழவந்தி ஊராட்சியில் ரூ.8.50 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடம் என மொத்தம் ரூ.1.03 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 8 கட்டிடங்களை அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார்.

மேலும் பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.42.99 லட்சத்தில் எர்ணாபுரம் - பரமத்தி சாலை முதல் திண்டமங்கலம் சாலை வரை உள்ள மண்சாலையை தார்சாலையாக மேம்படுத்தும் பணி, ரூ.29.89 லட்சத்தில் சுங்ககாரம்பட்டி - இருட்டணைபுதூர் சாலை முதல் கடக்கால்புதூர் சாலை வரை தார்சாலை அமைக்கும் பணி, மோகனூர் ஊராட்சி ஒன்றியம் செங்கம்பள்ளி ஊராட்சியில் ரூ.30 லட்சத்தில் குடலை கிணறு மற்றும் குடிநீர் வினியோக குழாய் அமைக்கும் பணி என மொத்தம் ரூ.1.02 கோடி மதிப்பீட்டில் 3 திட்டப்பணிகளை அமைச்சர் தங்கமணி பூமி பூஜையிட்டு தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சிகளில் திருச்செங்கோடு உதவி கலெக்டர் பாஸ்கரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மாலதி, நாமக்கல்-சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த ஆவின் தலைவர் சின்னுசாமி, அரசு வழக்கறிஞர் சந்திரசேகரன் உள்பட வருவாய் தாசில்தார்கள், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள், முன்னாள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கூட்டுறவாளர்கள் உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள், பயனாளிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். 

Next Story