தக்கலை அருகே கொட்டும் மழையில் கணவருடன் சேர்த்து வைக்க கோரி இளம்பெண் தர்ணா போராட்டம்


தக்கலை அருகே கொட்டும் மழையில் கணவருடன் சேர்த்து வைக்க கோரி இளம்பெண் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 16 July 2018 4:30 AM IST (Updated: 15 July 2018 10:10 PM IST)
t-max-icont-min-icon

தக்கலை அருகே கணவருடன் சேர்த்து வைக்ககோரி, கொட்டும் மழையில் மாமனார் வீட்டு முன் இளம்பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பத்மநாபபுரம்,

தக்கலை அருகே உள்ள முளகுமூடு ஆர்.சி. தெருவை சேர்ந்தவர் ராஜ். இவருடைய மகன் ரதீஷ் (வயது 25), கொத்தனார்.

இவருக்கும், நாகர்கோவில் புன்னைநகர் பகுதியை சேர்ந்த டென்சன் என்பவரது மகள் சகாயடென்சிக்கும் (20) கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் செல்போன் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்தது.

பின்னர், இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டு ஊட்டியில் உள்ள ஒரு தேயிலை எஸ்டேட்டில் வேலை பார்த்து வந்தனர்.

கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு ஊர் திரும்பிய அவர்கள், திக்கணங்கோடு மத்திக்கோடு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். ரதீசுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. மேலும், இருவருக்கும் குழந்தைகள் இல்லாதால் அடிக்கடி கணவன்–மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து சகாயடென்சி குளச்சல் மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் ரதீசை அழைத்து விசாரணை நடத்தி இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

அதைதொடர்ந்து ரதீசின் தாயார் 2 பேரையும் அழைத்து தக்கலை அருகே கூட்டமாவு பகுதியில் வாடகை வீட்டில் தங்கவைத்தார்.

 கடந்த மாதம் வீட்டை விட்டு வெளியே சென்ற ரதீஷ் அதன்பிறகு வீடு திரும்பாமல் மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த சகாய டென்சி, ரதீசின் பெற்றோர் வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீடு பூட்டிக்கிடந்தது. மேலும், ரதீசுக்கு போன் செய்தபோது அவர், சரியாக பதில் கூறாமல் இணைப்பை துண்டித்தார். 

இந்தநிலையில் 2 நாட்களுக்கு முன்பு ரதீசின் அக்காளுக்கு திருமணம் நடைபெற்றது சகாயடென்சிக்கு தெரிய வந்தது. அதைதொடர்ந்து நேற்று காலை சகாயடென்சி, முளகுமூட்டில் உள்ள ரதீசின் பெற்றோர் வீட்டிற்கு வந்தார்.  பின்னர் அவர், கணவனை கண்டுபிடித்து தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி மாமனார் வீட்டு முன் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது, அந்த பகுதியில் திடீரென மழைபெய்தது. ஆனாலும் அவர், கொட்டும் மழையில் குடையை பிடித்தபடி தனது போராட்டத்தை தொடர்ந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த தக்கலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சகாயடென்சியிடம் விசாரணை நடத்தினார்கள். அதைதொடர்ந்து அவரை போலீசார் குளச்சல் மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

Next Story