கவர்னர் ஆய்வுக்கு வந்தால் கருப்புக்கொடி காட்டுவோம் முத்தரசன் பேச்சு


கவர்னர் ஆய்வுக்கு வந்தால் கருப்புக்கொடி காட்டுவோம் முத்தரசன் பேச்சு
x
தினத்தந்தி 16 July 2018 4:30 AM IST (Updated: 15 July 2018 10:47 PM IST)
t-max-icont-min-icon

கவர்னர் ஆய்வுக்கு வந்தால் கருப்புக்கொடி காட்டுவோம் என திருவாரூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ரா.முத்தரசன் கூறினார்.

திருவாரூர்,

திருவாரூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டக்குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாநில கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் வையாபுரி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சிவபுண்ணியம் முன்னிலை வகித்தார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

இந்தியாவில் தேர்தல் ஆணையம் முதல் நீதித்துறை வரை அனைத்தும் நம்பக தன்மையினை இழந்துள்ளது. மாணவர்களின் கல்வி உரிமை, வேலைவாய்ப்பு, மாநில சுயாட்சி உரிமை அனைத்தும் பறி போயுள்ளது. தமிழகத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு செய்ய வந்தால் நிச்சயம் கருப்புக்கொடி காட்டுவோம்.
பயிர்க்கடன்

தமிழக அரசு ஒரு போக சாகுபடிக்கு உடனடியாக தண்ணீர் திறப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன் அனைத்தையும் தள்ளுபடி செய்து புதிதாக கடன் வழங்க வேண்டும். குடிமராமத்து பணிகளை விவசாயிகள் கொண்ட குழுக்கள் மூலம் செயல்படுத்தாமல் ஆளும் கட்சியினரே ஈடுபட்டு வருவதால் பல்வேறு ஊழல் முறைகேடு ஏற்பட்டுள்ளது. இதனை தடுத்து முறையாக கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் தேசியக்குழு உறுப்பினர் பழனிச்சாமி, மாநில நிர்வாகக்குழு உறுப்பினர்கள் எம்.செல்வராசு, முன்னாள் மாவட்ட செயலாளர் செல்வராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. உலகநாதன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஞானமோகன், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மாசிலாமணி, மாதர் சங்க மாவட்ட செயலாளர் தமயந்தி, ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் சந்திரசேகரஆசாத், இளைஞர் மன்ற மாவட்ட செயலாளர் முருகேசு, மாணவர் மன்ற ஒருங்கிணைப்பாளர் துரை.அருள்ராஜன் உள்பட கலந்து கொண்டனர்.

Next Story