அ.தி.மு.க.வை யாராலும் அசைக்க முடியாது - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு


அ.தி.மு.க.வை யாராலும் அசைக்க முடியாது - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு
x
தினத்தந்தி 16 July 2018 4:00 AM IST (Updated: 16 July 2018 12:33 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க.வை யாராலும் அசைக்க முடியாது என்று அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

கோவை,

கோவை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் கோவை அண்ணாசிலை அருகே உள்ள இதயதெய்வம் மாளிகையில் நேற்று நடந்தது. தமிழக சட்டசபை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், எம்.பி.க்கள் ஏ.கே.செல்வராஜ், சி.மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் கோவை புறநகர் மாவட்ட செயலாளரும், தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டு, ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்டு விரிந்து, பரந்து இருக்கும் அ.தி.மு.க.வை சிலர் எப்படியாவது பிரித்து விட வேண்டும் என்று நினைத்து போராடி வருகிறார்கள். தற்போது இந்த கட்சியை ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்–அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்–அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் திறம்பட வழிநடத்தி வருகிறார்கள்.

முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், நீங்கள் கட்சியில் தலையிட வேண்டாம், நாங்களே பார்த்துக்கொள்கிறோம் என்று நானும், அமைச்சர் தங்கமணியும் சேர்ந்து டி.டி.வி. தினகரனிடம் கூறினோம். இதனால்தான் அவர் எங்கள் மீது கோபமாக இருந்து, குறை கூறி வருகிறார். அத்துடன் எப்படியாவது கட்சியை கைப்பற்றிவிட வேண்டும் என்று நினைத்து செயல்பட்டு வருகிறார்.

தற்போது கட்சியும், கொடியும் நமது கையில்தான் இருக்கிறது. அ.தி.மு.க. என்ற ஒரு மாபெரும் இயக்கத்தை யாராலும் அசைக்க முடியாது. கோவையில் டி.டி.வி. தினகரன் ஒரு கூட்டத்தை நடத்தினார். அந்த கூட்டத்துக்கு பொதுமக்களை அழைத்து வந்தது எப்படி என்று எங்களுக்கு நன்றாக தெரியும். ஆனால் அவருடன் பின் செல்லும் சிலர் எதற்காக செல்கிறார்கள் என்றும் எங்களுக்கு நன்றாக தெரியும்.

தற்போது அவர் தி.மு.க.வுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார். எனவே நமக்கு எதிரி, தி.மு.க.வும், டி.டி.வி. தினகரனும் தான். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் விரைவில் வர உள்ளது. உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகளின் பதவியை மேலும் 6 மாதத்துக்கு நீட்டிப்பு செய்யப்பட்டதற்கு காரணம், விரைவில் தேர்தலை நடத்துவதற்காகதான். ஆனால் அதை சிலர் தவறாக புரிந்து கொண்டு அவதூறாக பேசி வருகிறார்கள்.

எனவே நாம் அனைவரும் ஒன்றாக செயல்பட்டு உள்ளாட்சி தேர்தலிலும், அடுத்த ஆண்டில் நடக்க உள்ள பாராளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற பாடுபட வேண்டும். குறிப்பாக உறுப்பினர்கள் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும். தமிழகத்திலேயே கோவை மாவட்டம்தான் அதிகமாக உறுப்பினர்களை சேர்த்து உள்ளது என்ற பெருமை நமக்கு கிடைத்து உள்ளது. இன்னும் அதிக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் அர்ச்சுனன், ஓ.கே.சின்னராஜ், வி.சி.ஆறுக்குட்டி, எட்டிமடை சண்முகம், கனகராஜ், கஸ்தூரி வாசு, முன்னாள் அமைச்சர்கள் செ.ம.வேலுசாமி, தாமோதரன், முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.ராஜூ, மற்றும் சி.டி.சின்னராஜ், வால்பாறை அமீது, செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story