காமராஜர் கண்ட கனவு அ.தி.மு.க. அரசால் நிறைவேற்றப்படுகிறது - எடப்பாடி பழனிசாமி பேச்சு
காமராஜர் கண்ட கனவு அ.தி.மு.க. அரசால் இன்றைக்கு நிறைவேற்றப்படுகிறது என்று முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
விருதுநகர்,
விருதுநகரில் நாடார் மகாஜன சங்கம் சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் 116–வது பிறந்தநாள் விழா கல்வி திருவிழாவாக கொண்டாடப்பட்டது. விருதுநகர் கே.வி.எஸ். மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காமராஜர் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், காந்தி பேரவை நிறுவனர் குமரி அனந்தன், தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கினார். பழ.நெடுமாறன் சார்பில் அவரது பிரதிநிதி மாணிக்கம் விருதினை பெற்றுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து விருதுநகர் நாடார் மகமை கமிட்டி உள்பட 3 கல்வி நிறுவனங்களுக்கு கல்விச் சேவை விருதையும், 4 மருத்துவமனைகளுக்கு மருத்துவ சேவை விருதையும் வழங்கி எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:–
இன்று, தமிழ்நாட்டில் 80 சதவீதத்திற்கு மேல் கல்வியறிவு பெற்றவர் இருக்கின்றனர் என்றால், அதற்கு அடித்தளம் இட்டவர் பெருந்தலைவர் காமராஜர் என்பதை யாரும் மறுக்க முடியாது. மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா வழியில் வந்த, அ.தி.மு.க. அரசு, அனைவருக்கும் தரமான கல்வியை அளிப்பதற்கு உறுதி பூண்டுள்ளது.
காமராஜர் பள்ளிக்கல்விக்கு எவ்வாறு ஊக்கம் அளித்தாரோ, அதுபோல் அ.தி.மு.க. அரசு உயர் கல்வித்துறைக்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறது.
2011–ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சி பொறுப்பேற்றபோது, உயர்கல்வி படித்திருந்த மாணவர்களின் சதவீதம் 21. இன்றைய தினம் தமிழகத்தில் 46.94 சதவீத மாணவர்கள் உயர்கல்வி படிக்கின்றனர். இதன் காரணமாக இந்தியாவிலேயே உயர்கல்வி படிக்கின்ற மாணவர்கள் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. பெருந்தலைவர் காமராஜர் கண்ட கனவு அ.தி.மு.க. அரசால் இன்றைக்கு நிறைவேற்றப்பட்டிருக்கிறது. விவசாய நிலங்களுக்கு பாசன வசதி அளித்து உணவு உற்பத்தியைப் பெருக்க ஆறுகளின் குறுக்கே காமராஜர் காலத்தில் பல்வேறு அணைகளை கட்டப்பட்டது.
பரம்பிக்குளம்–ஆழியார் திட்டம், கீழ்பவானி நீர்த்தேக்கத் திட்டம், அமராவதி அணைக்கட்டுத்திட்டம், சாத்தனூர் நீர்த்தேக்கத் திட்டம், வைகை அணைக்கட்டுத் திட்டம், மணிமுத்தாறு உயர்மட்ட கால்வாய் திட்டம், இப்படி பல அணைகளை கட்டி விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்தவர் காமராஜர்.
மின்சக்தியை பெருக்காமல் தொழில் வளர்ச்சிகாண முடியாது என்பதை நன்கு அறிந்து பல மின் திட்டங்களை காமராஜர் செயல்படுத்தினார். பெரியார் மின்சக்தி திட்டம், குந்தா மின்சக்தி திட்டம், நெய்வேலி மின்சக்தி திட்டம், கும்பார் அமராவதி மின்திட்டம், மேட்டூர் கீழ்நிலை நீர்செல்வழி மின்திட்டம் ஆகிய மின் திட்டங்கள் காமராஜரால் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் என்பதை பெருமையோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
ஜெயலலிதா வழியில் இன்றும் ஆளுகின்ற நம்முடைய அரசால் தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக திகழ்கிறது என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
தாய் நாட்டின் மீது இருந்த அதே பற்று, தாய்மொழியின் மீதும் காமராஜருக்கு இருந்தது. சென்னை மாகாணத்தின் 1957–1958–ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தமிழிலேயே சமர்ப்பிக்கப்பட்டது காமராஜர் ஆட்சியில்தான். 1956–ல் தமிழ் ஆட்சி மொழிச்சட்டம் கொண்டு வந்ததும் காமராஜர்தான். காமராஜர் ஆட்சிக்காலத்தில்தான் தமிழ்நாடு பாடநூல் வெளியீட்டுக் கழகம் தோற்றுவிக்கப்பட்டது. தமிழை பயிற்று மொழியாக கொண்டு படிப்பவர்களுக்கு மாத ஊக்கத்தொகையும், அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமையும் வழங்கப்பட்டன.
நாட்டைப்பற்றி தன் மனதில் தேக்கி வைத்திருந்த எண்ணங்களை எல்லாம் பின்னாளில் தமிழ்நாட்டின் முதல்–அமைச்சராக பொறுப்புக்கு வந்த பிறகு படிப்படியாக நிறைவேற்றினார். தலைவர்களுக்கு முன்மாதிரியாக விளங்கியதோடு மட்டுமல்லாமல், மக்களுக்கும், மாணவர்களுக்கும் முன்மாதிரியாக திகழ்ந்தவர் காமராஜர்.
உலகில் பிறப்பால் சிலர் பெருமை பெற்றனர்; சிலர் தமது உழைப்பால், பெருமை பெற்றனர்; சிலர் மீதோ பெருமை திணிக்கப்பட்டது, பெருந்தலைவர் காமராஜர், உழைப்பால் மட்டுமே பெருமையை எட்டிப் பிடித்தவர். எனவே, இந்திய அரசியல் வரலாற்றில் காமராஜருக்குத் தனித் தன்மையோடு கூடிய ஒரு முக்கிய இடம் உண்டு என்பதில் தமிழர்களாகிய நாம் பெருமை அடையலாம்.
குடும்ப பின்னணி, பணபலம், உயர் கல்வி ஆகிய பின்புலம் ஏதுமின்றி காமராஜர், ஒரு சாதாரண தொண்டனாகப் பொது வாழ்க்கையைத் தொடங்கி, ஒரு பெருந்தலைவராகப் வளர்ந்தது சரித்திர சாதனையாகும். தலைவர்களுக்கு நல்ல தொண்டராகவும், தொண்டர்களுக்கு நல்ல தலைவராகவும் காமராஜர் வாழ்ந்தார். மனிதர்களை எடைபோடுவது, சமயோசித ஆற்றல், பொறுமை, நிதானம், தொண்டர்களிடம் நெருக்கம் ஆகியன காமராஜரிடம் காணப்பட்ட சீரிய பண்புகள். பிரச்சினைகளை அலசி ஆராய்ந்து, அனைவரின் கருத்துக்களையும் கேட்டு முடிவெடுக்கும் சிறந்த தலைமைப் பண்பு அவரது வெற்றியின் ரகசியம்.
காமராஜர் சமுதாயத்தின் அடித்தட்டில் இருந்து தலைவராக உருவாகி வந்த காரணத்தால், சமுதாயப் பிரச்சினைகளை நன்கு உணர்ந்திருந்தார்.
‘கல்வி கண் திறந்த காமராஜர்’ என்று பாமர மக்களால் போற்றப்பட்ட காமராஜரின் பிறந்த நாளை தமிழ்நாடு அரசு கல்வி வளர்ச்சி நாளாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது. தென்னகத்தில் தொடங்கப்பட உள்ள பல் மருத்துவ கல்லூரியை தமிழகத்தில் கல்விப் புரட்சியை ஏற்படுத்திய காமராஜர் பிறந்த மாவட்டமான விருதுநகரில் தொடங்குவதே சாலச் சிறந்தது என்பதால், இங்கு அக்கல்லூரியை தொடங்க நான் ஆணையிட்டுள்ளேன்.
காமராஜர் கிராமத்தில் வாழ்பவர்களுக்கு ஒரு வழிகாட்டியாகத் திகழ்ந்தார். அதிகமாக பள்ளிகளை கிராமந்தோறும் திறந்த காரணத்தினால்தான், கிராமத்திலே பிறந்தவர்கள் அறிவு ஜீவியாக, பல்வேறு பதவிக்கு உயர்ந்த நிலைக்கு வருவதற்கு காரணம் அடித்தளமாக திகழ்ந்தவர் காமராஜர். நானும் கிராமத்திலே பயின்றவன், அந்த சிறப்புக்கு உரியவர்களின் நானும் ஒருவன்.
காமராஜர் முதல்–அமைச்சராக இருந்த காலத்திலே கல்விக்கு முன்னுரிமை கொடுத்து, குறிப்பாக கிராமத்திலே வாழ்கின்ற ஏழை, எளிய, நடுத்தர மாணவர்கள் கிராமத்திலே படிப்பதன் மூலமாக கல்வி அறிவு பெறுவதற்கு அவர் உருவாக்கித் தந்த பள்ளிகளில்தான் இன்றைக்கு மேடையிலே வீற்றிருக்கின்ற அத்தனைபேரையும் உருவாக்கியது என்று சொன்னால், அதன் பெருமைக்குரியவர் காமராஜர்தான். ஏனென்றால், அந்த சிந்தனை அவரிடத்திலே இருந்தது, அதை நனவாக்கியவரும் அவர்தான்.
அதுமட்டுமல்ல, என்னுடைய பகுதியைப் பொறுத்தவரைக்கும், கிட்டத்தட்ட 10 சதவீதம் நாடார் சமுதாயத்தினர் இருக்கின்றார்கள். அதிலே 80 சதவீதம் அ.தி.மு.க.வை ஆதரிக்கக்கூடியவர்கள். இந்தியாவிலேயே பரந்து, விரிந்து தொழில் செய்கின்ற சமுதாயம் நாடார் சமுதாயம். எந்த மூலைக்குச் சென்றாலும் அங்கே ஒருவர் இருப்பார், அந்தளவிற்கு அறிவுப்பூர்வமான சிந்தனை உடையவர்கள் இந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். அதற்கு அடித்தளமாக விளங்கியவர் காமராஜர் என்பதை நாம் நினைவுகொள்ள வேண்டும். நாடார் சமுதாய மக்கள் வளரவேண்டும், அவர்களுடைய வாழ்க்கை மிளிர வேண்டும், வாழ்வு சிறக்க வேண்டும், அவர்களுடைய வாழ்வு உயர்வதற்கு நாங்கள் அத்தனை உதவிகளையும் செய்வோம்.
இந்த நாட்டிற்கு உழைத்தவர், தேசபக்தி கொண்டவர், எளிமையாக வாழ்ந்தவர், மக்களுக்காக வாழ்ந்து மறைந்த தலைவர் காமராஜர்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த விழாவில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கடம்பூர் ராஜூ, மாபா பாண்டியராஜன், கே.டி.ராஜேந்திரபாலாஜி, ராஜலட்சுமி, தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய்சுந்தரம், எம்.பி.க்கள் ராதாகிருஷ்ணன் (விருதுநகர்), பிரபாகரன் (நெல்லை), ஜெய்சிங்தியாகராஜ நட்டர்ஜி (தூத்துக்குடி), எம்.எல்.ஏ.க்கள் சந்திரபிரபா (ஸ்ரீவில்லிபுத்தூர்), சண்முகநாதன் (ஸ்ரீவைகுண்டம்), செல்வமோகன்தாஸ் பாண்டியன் (தென்காசி), இன்பத்துரை (ராதாபுரம்), முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக முதல்–அமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு நாடார் மகாஜன சங்க நிர்வாகிகள் நினைவு பரிசு வழங்கினர். இவ்விழாவில் வரவேற்புரையாற்றிய நாடார் மகாஜன சங்க பொதுச் செயலாளர் கரிகோல்ராஜ், குளச்சல் துறைமுக திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் உருவாக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வைத்தார்.
முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாடார் மகாஜன சங்கத்தின் கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார். விழாவில் த.மா.கா. சார்பில் மாநில ஒழுங்கு நடவடிக்கைக்குழு தலைவர் என்.எஸ்.வி.சித்தன், மாநில பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, தங்கப்பாண்டியன், ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். ராதாபுரம் எம்.எல்.ஏ. இன்பத்துரை நன்றி கூறினார்.
தட்சிணமாற நாடார் சங்க தலைவர் சபாபதி பேசும்போது, ‘‘டெல்லி பல்கலைக்கழகத்திலும், உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்திலும் காமராஜர் பெயரில் இருக்கை ஏற்படுத்த வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டார்.