காரை பெரிய ஏரியில் சீரமைப்பு பணிகளை அதிகாரி ஆய்வு


காரை பெரிய ஏரியில் சீரமைப்பு பணிகளை அதிகாரி ஆய்வு
x
தினத்தந்தி 15 July 2018 10:45 PM GMT (Updated: 15 July 2018 7:27 PM GMT)

பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு குடிமராமத்து திட்டத்தின் கீழ் 15 ஏரிகளை சீரமைக்க தமிழக அரசின் மூலம் ரூ.175 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு குடிமராமத்து திட்டத்தின் கீழ் 15 ஏரிகளை சீரமைக்க தமிழக அரசின் மூலம் ரூ.175 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, ஆலத்தூர் தாலுகா காரை கிராமத்தில் உள்ள பெரிய ஏரி குடிமராமத்து திட்டத்தின் கீழ் பாசனதாரர் சங்கத்தின் மூலம் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மேற்படி பணிகளை மாவட்ட கலெக்டர் சாந்தா முன்னிலையில், தேசிய சுகாதாரத்திட்ட இயக்குனரும், குடிமராமத்து பணிகளுக்கான கண்காணிப்பு அலுவலருமான டாக்டர் தரேஸ் அஹமது பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அவர் ஆலத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட கொட்டரை கிராமத்தில் மருதையாற்றின் குறுக்கே ரூ.67.50 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் புதிய நீர்தேக்கத்தின் கட்டுமான பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) ஸ்ரீதர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தட்சிணாமூர்த்தி, தாசில்தார் ஷாஜஹான் மற்றும் காரை பெரிய ஏரியின் பாசனதாரர் சங்கத்தின் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இதே போல் பெரம்பலூர் மாவட்ட தலைமை மருத்துவமனை அருகே ரூ.10 கோடி மதிப்பீட்டில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் மூன்று தளங்கள் உடைய மருத்துவமனையின் மேம்பாட்டு பணிகளை தேசிய சுகாதாரத்திட்ட இயக்குனர் டாக்டர் தரேஸ் அஹமது பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், விரிவாக்கப்பணிகள் விரைந்து நடைபெற்று, கட்டுமானப்பணிகள் ஓராண்டு காலத்திற்குள் நிறைவு பெற்று மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். 

Next Story