அ.தி.மு.க.வை எந்த கொம்பானாலும் அசைக்க முடியாது, முதல்–அமைச்சர், துணை முதல்–அமைச்சர் பேச்சு
அ.தி.மு.க.வை எந்த கொம்பானாலும் அசைக்க முடியாது என மதுரையில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தெரிவித்தனர்.
மதுரை,
தமிழக கூட்டுறவு துறை அமைச்சரும், மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான அமைச்சர் செல்லூர் ராஜூ ஏற்பாட்டின் பேரில் மதுரை பரவையில் மாநகர் மாவட்ட கட்சி அலுவலகம் கட்டப்படுகிறது. இதற்கான பூமிபூஜை நிகழ்ச்சி நேற்று நடந்தது. அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமை தாங்கினார். முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் எடப்பாடி பழனிசாமி பேசும் போது, ‘‘ஒன்றரை கோடி தொண்டர்கள் நிறைந்த மாபெரும் இயக்கம் அ.தி.மு.க. இந்த இயக்கத்தை வலுவோடும், பொலிவோடும் நடத்தி இந்தியாவிலேயே 3–வது பெரிய கட்சியாக மாற்றி காட்டியவர் ஜெயலலிதா. ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சி அலுவலகம் கட்ட ஜெயலலிதா உத்தரவிட்டு இருந்தார். அவரின் கனவை நினைவாக்கும் வகையில் மதுரையில் கட்சி அலுவலகம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க.வினர் மட்டுமின்றி, இங்கு பொதுமக்களும் மனு கொடுக்கலாம். அவர்களின் கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்படும். இந்த இயக்கத்தை யாராலும் அசைக்க முடியாது‘‘ என்றார்.
துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேசும் போது, அ.தி.மு.க. தொடங்கும் போது 16 லட்சம் உறுப்பினர்கள் இருந்தனர். ஆனால் ஒன்றரை கோடி தொண்டர்கள் கொண்ட இயக்கமாக மாற்றி காட்டியவர் ஜெயலலிதா. இந்த எக்கு கோட்டையான அ.தி.மு.க.வை எந்த கொம்பானாலும் அடைக்க முடியாது என்றார்.