8 வழி சாலை திட்டத்தை மத்திய- மாநில அரசுகள் கைவிட வேண்டும்


8 வழி சாலை திட்டத்தை மத்திய- மாநில அரசுகள் கைவிட வேண்டும்
x
தினத்தந்தி 16 July 2018 4:00 AM IST (Updated: 16 July 2018 1:28 AM IST)
t-max-icont-min-icon

8 வழி சாலை திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் என கரூரில் நடந்த செயற்குழு கூட்டத்தில் கொங்குநாடு வேட்டுவ கவுண்டர் சங்கம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கரூர்,

கொங்குநாடு வேட்டுவ கவுண்டர் சங்கம் மற்றும் இளைஞரணியின் கரூர் மாவட்ட செயற்குழு கூட்டம் கரூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாநில அமைப்பாளர் வீரவேங்கை செல்வம் தலைமை தாங்கினார். தலைமை நிலைய செயலாளர் சேகர் வரவேற்று பேசினார். இதில் சிறப்பு விருந்தினராக நிறுவன தலைவர் மருதமுத்து கவுண்டர் கலந்து கொண்டு, சங்கத்தின் வருங்கால நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார். பொது செயலாளர் வேலுமணி, மாநில நிர்வாகிகள் மதி, ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள செங்கம், வேடியப்பன் மலைபகுதி, கஞ்சமலைபகுதி உள்ளிட்ட இடங்களில் செங்கம் நடுகற்கள், வேடியப்பன் சிலைகள், கல்திட்டைகள் என தொண்மையான வரலாற்று அடையாளங்கள் இருக்கின்றன. மேலும் விழுப்புரம் மாவட்டம் கல்வராயன்மலை பகுதியில் வேட்டுவர்களின் பழங்கால வரலாற்று சான்றுகள் உள்ளன. இவை சேலம்- சென்னைக்கு அமைக்கப்படும் 8 வழி சாலை திட்டத்தால் சிதைந்து போக வாய்ப்புள்ளது. எனவே அந்த திட்டத்தை கைவிட்டு தமிழகத்தின் தொண்மை வரலாற்றை பாதுகாத்திட மத்திய- மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கரூர் மாவட்டம் புகளூர் அருகேயுள்ள காகித ஆலை நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்பும் போது, குருக்குபாளையம், பாண்டிபாளையம், நாணப்பரப்பு உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். உலக வெப்பமயமாதலின் காரணமாக கரூர் மாவட்டத்தில் எந்திரம் மூலம் மரங்களை வேரோடு பிடுங்குவதை தடுத்து நிறுத்த வேண்டும். மேலும் மோகனூரில் உள்ள வேட்டுவர்களின் குலதெய்வ கோவிலை பராமரிப்பது, வேட்டுவ கவுண்டர்கள் சமூகத்தினரின் கல்வி, வேலைவாய்ப்பு, இடஒதுக்கீடு உள்ளிட்டவற்றில் முன்னேற்றம் காண வழிவகுப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் நிர்வாகிகள், உறுப்பினர்கள், இளைஞரணியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நிர்வாகி கார்த்தி நன்றி கூறினார். 

Next Story