பெண்ணுடன் ஐ.பி.எஸ். அதிகாரி நெருக்கமாக இருக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பு
பெண்ணுடன் ஐ.பி.எஸ். அதிகாரி நெருக்கமாக இருக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரு,
உள்துறை அதிகாரிகளிடம் விவரம் கேட்டுள்ளதாக துணை முதல்–மந்திரி பரமேஸ்வர் தெரிவித்துள்ளார்.
தாவணகெரே மாவட்டத்தை சேர்ந்த பெண் தனது கணவருடன், அங்குள்ள கிராமத்தில் வசித்து வருகிறார். அந்த பெண்ணின் கணவர் ஸ்டூடியோ கடை வைத்து நடத்தி வருகிறார். அந்த பெண்ணும், கர்நாடகத்தில் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வரும் ஐ.பி.எஸ். அதிகாரிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி பெண்ணின் கணவருக்கு தெரியவந்ததும், அவர் தனது மனைவியை கண்டித்ததாக கூறப்படுகிறது.மேலும் தனது மனைவியும், ஐ.பி.எஸ். அதிகாரியும் நெருக்கமாக இருப்பது பற்றி உயர் போலீஸ் அதிகாரிகளிடம் பெண்ணின் கணவர் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், அந்த பெண்ணும், ஐ.பி.எஸ். அதிகாரியும் நெருக்கமாக இருக்கும் வீடியோ காட்சிகள் நேற்று கன்னட தொலைக்காட்சிகள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியானது. இது கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையில், எனது மனைவியுடன் உள்ள தொடர்பை கைவிடும்படி கூறியதற்கு ஐ.பி.எஸ். அதிகாரி தனக்கு தொல்லை கொடுத்ததுடன், மிரட்டவும் செய்தார் என்று பெண்ணின் கணவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். இதுதொடர்பாக மாநில போலீஸ் டி.ஜி.பி. நீலமணி ராஜுவை சந்தித்து, அந்த பெண்ணின் கணவர், ஐ.பி.எஸ். அதிகாரி மீது புகார் கொடுத்தார். பெண்ணின் கணவருக்கு பெங்களூரு கோரமங்களாவில் வீடு இருப்பதால், கோரமங்களா போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கும்படி, அவரிடம் டி.ஜி.பி. தெரிவித்தார்.இதையடுத்து, கோரமங்களா போலீஸ் நிலையத்தில் ஐ.பி.எஸ். அதிகாரி மீது பெண்ணின் கணவர் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரை போலீசார் பெற்றுக் கொண்டனர். ஆனால் போலீசார் வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை. இதுபற்றி போலீஸ் துறையை தன்வசம் வைத்துள்ள துணை முதல்–மந்திரி பரமேஸ்வரிடம் நேற்று நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். உடனே அவர், ‘இந்த விவகாரம் தொடர்பாக உள்துறை அதிகாரிகளிடம் விவரம் கேட்டுள்ளேன். அவர்கள் விவரம் அளித்த பின்பு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,‘ என்றார்.