சோமங்கலம் அருகே கொள்ளையடிக்க சதி திட்டம் தீட்டிய 3 பேர் கைது


சோமங்கலம் அருகே கொள்ளையடிக்க சதி திட்டம் தீட்டிய 3 பேர் கைது
x
தினத்தந்தி 16 July 2018 5:34 AM IST (Updated: 16 July 2018 5:34 AM IST)
t-max-icont-min-icon

சோமங்கலம் அருகே, கூட்டு கொள்ளையில் ஈடுபட சதி திட்டம் தீட்டிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய 5 பேரை தேடி வருகின்றனர்.

படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் சோமங்கலம் அருகே உள்ள நடுவீரப்பட்டு தர்காஸ் காட்டுப்பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் சந்தேகப்படும் படியாக மர்மநபர்கள் பதுங்கி இருப்பதாக சோமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

அதன் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் அந்த கும்பலை பிடிக்க நடுவீரப்பட்டு தர்காஸ் காட்டுப்பகுதிக்கு விரைந்து சென்றனர்.

அங்கு அடர்ந்த காட்டுப்பகுதியில் 8-க்கும் மேற்பட்டவர்கள் இருப்பதை கண்ட போலீசார், அவர்களை மடக்கி பிடிக்க முயன்றனர். போலீசாரை பார்த்ததும், அந்த கும்பல் அங்கிருந்து நாலாபுறமும் சிதறி ஓடினர். அவர்களை போலீசார் விரட்டிச்சென்றனர்.

அப்போது 3 பேர் மட்டும் போலீசாரிடம் சிக்கினார்கள். 5 பேர் தப்பி ஓடிவிட்டனர். பிடிபட்ட 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில் அவர்கள், சாலமங்கலம் பஜனைக்கோவில் தெருவைச் சேர்ந்த பாலமுருகன்(வயது 21), கரசங்கால் மேட்டுத்தெரு பகுதியைச்சேர்ந்த அஜித்(22) மற்றும் ஆத்தனஞ்சேரி அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த சதீஷ்குமார்(29) என தெரியவந்தது.

மேலும் இவர்கள், அந்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மற்றும் வீட்டில் தனியாக இருப்பவர்களை மிரட்டி, ஆயுதங்களால் தாக்கி கூட்டுக்கொள்ளையில் ஈடுபட சதி திட்டம் தீட்டியதும் தெரிந்தது.

அவர்களிடம் இருந்து 2 கத்திகள், 2 வீச்சரிவாள்கள் மற்றும் உருட்டுக்கட்டைகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிடிபட்ட 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் 3 பேரையும் ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, நீதிபதி உத்தரவின்பேரில் செங்கல்பட்டு கிளை சிறையில் அடைத்தனர்.

மேலும் தப்பி ஓடிய அவர்களின் கூட்டாளிகளான அருண் என்ற அருண்குமார், சுரேஷ், சேது, கண்ணியப்பன் மற்றும் அஜித் ஆகிய 5 பேரையும் பிடிக்க ஸ்ரீபெரும்புதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவின்பேரில் தனிப்படை அமைத்து போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story