தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்,
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் பணியாற்றும் பருவகால மாற்றுத்திறனாளிகளை பணி நிரந்தரம் செய்ய கோரி தஞ்சை கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க தலைவர் பகாத்அகமது தலைமை தாங்கினார்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் பணியாற்றும் பருவகால மாற்றுத்திறனாளிகளை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அரசாணையின்படி 2 ஆண்டுகளுக்கும் மேல் தொகுப்பு ஊதியத்தில் பணிபுரியும் மாற்றுத்திறனாளி பணியாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். தமிழகம் முழுவதும் பணிபுரியும் பருவகால மாற்றுத்திறனாளி பணியாளர்களை தமிழக அரசு நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
இது குறித்து மாவட்ட வருவாய் அதிகாரி சக்திவேலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் அவர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு கிடைக்க வேண்டிய அனைத்தும் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்தார். இதையடுத்து 2 மணி நேரத்திற்கு பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது.