கணவர் 2-வது திருமணம் செய்ததால் மனநலம் பாதித்து இமாச்சலபிரதேசத்தில் சுற்றிய மைசூரு பெண்


கணவர் 2-வது திருமணம் செய்ததால் மனநலம் பாதித்து இமாச்சலபிரதேசத்தில் சுற்றிய மைசூரு பெண்
x
தினத்தந்தி 17 July 2018 4:15 AM IST (Updated: 17 July 2018 12:12 AM IST)
t-max-icont-min-icon

குழந்தை இல்லாததால் கணவர் 2-வது திருமணம் செய்ததால் மனநலம் பாதித்து இமாச்சலபிரதேசத்தில் சுற்றிய மைசூரு பெண், 2 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த ஊருக்கு அழைத்துவர ஏற்பாடு நடந்து வருகிறது.

பெங்களூரு,

மைசூரு மாவட்டம் பிரியப்பட்டணா தாலுகா கம்பளாபுரா அருகே மாக்கனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சரஸ்வதி என்கிற பத்மா (வயது 40). இவரது தாய் பர்வதம்மா. பர்வதம்மாவுக்கு சரஸ்வதி, லட்சுமி உள்பட 5 மகள்கள் உள்ளனர். ஹரீஷ் என்ற மகன் இருக்கிறார்.

கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு சரஸ்வதிக்கும், ஹாசன் மாவட்டம் சென்னராயப்பட்டணா தாலுகா வத்தரஹட்டி கிராமத்தை சேர்ந்த தர்னேஷ் என்பவருக்கும் திருமணம் நடந்தது. ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் குழந்தை இல்லை. இதனால் தர்னேஷ், வேறொரு பெண்ணை 2-வது திருமணம் செய்துகொண்டார். இதை அறிந்த சரஸ்வதி மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டார்.

பின்னர் அவர் மாக்கனஹள்ளியில் உள்ள தாய்வீட்டுக்கு வந்தார். அந்த சமயத்தில் கணவர் தன்னைவிட்டு விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாத சரஸ்வதி மன நிலை பாதிக்கப்பட்டார். மேலும், தனது கணவர் காணாமல் போய்விட்டார். அவரை தேடி கண்டுபிடிக்க வேண்டும் என்று அடிக்கடி சரஸ்வதி கூறி வந்துள்ளார். இதற்கிடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூருவில் உள்ள ஆயத்த ஆடை நிறுவனத்திற்கு வேலைக்கு செல்வதாக ரெயிலில் சரஸ்வதி சென்றுள்ளார்.

ஆனால் மனநலம் பாதித்த சரஸ்வதி ரெயிலில் சண்டிகார் சென்றுள்ளார். சிறிது நாட்கள் அங்கிருந்த அவர் பிறகு, டெல்லிக்கும் அடுத்து இமாச்சல பிரதேசத்திற்கும் சென்றுள்ளார். அவர் சிம்லாவுக்கு சென்று சாலைகளில் சுற்றித்திரிந்து வந்துள்ளார். அவரை சிம்லா குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறையினர் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். தற்போது சரஸ்வதி குணமடைந்து வருவதாக சொல்லப்படுகிறது. அவர் வீட்டில் இருந்து சென்று 2 ஆண்டுகள் ஆகிறது. இதனால் சரஸ்வதி, தனது சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்றும் சிம்லா குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை அதிகாரி டாக்டர் சஞ்சய் பதக்கிடம் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அங்குள்ள உள்ளூர் பத்திரிகைகளில் புகைப்படத்துடன் செய்தி வெளியாகியுள்ளது. அதை சிலர் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு இருந்தனர். 2 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் சரஸ்வதி கொடுத்த முகவரி மூலம், டாக்டர் சஞ்சய் பதக், சமூகஆர்வலர் சுனீலா சர்மா ஆகியோர் மைசூரு கலெக்டர் அபிராம் ஜி.சங்கரை தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளனர். இதையடுத்து மைசூரு மாவட்ட குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை அதிகாரிகள் சரஸ்வதியை சொந்த ஊருக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறார்கள்.

தற்போது சரஸ்வதியின் தாய் பர்வதம்மாவுடன் சரஸ்வதியின் சகோதரி லட்சுமி, அவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி, மகன் ஹரீஷ் ஆகியோர் வசித்து வருகிறார்கள். கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்தி வரும் இவர்களது வீடு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இடிந்துவிழுந்து விட்டது. இதையடுத்து அரசு சார்பில் வீடு கட்ட ரூ.1.96 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் போதிய நிதி இல்லாததால் புதிய வீடு கட்டும் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சரஸ்வதியை தங்களது வீட்டில் தங்கவைக்க முடியாத நிலை உள்ளது. எனவே அந்த வீடு கட்டி முடிக்கப்படும் வரை சரஸ்வதியை, மைசூருவில் உள்ள குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை காப்பகத்தில் தங்க அனுமதிக்க வேண்டும் என்று அவரது சகோதரி லட்சுமியின் கணவர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதுபற்றி மைசூரு கலெக்டர் அபிராம் ஜி.சங்கர் கூறுகையில், குடும்ப சூழ்நிலை காரணமாக சரஸ்வதியை தற்போது அவரது குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை. அதுவரை சரஸ்வதி மைசூரு சாமுண்டிமலை அடிவாரத்தில் உள்ள பெண்கள் மறுவாழ்வு மையத்தில் தங்கவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அவரை விரைவில் மைசூருவுக்கு அழைத்து வர அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது என்றார்.

Next Story