டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கலெக்டரிடம் மனு


டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 17 July 2018 4:15 AM IST (Updated: 17 July 2018 12:22 AM IST)
t-max-icont-min-icon

தத்தனூர் கிராமத்தில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

அரியலூர்,

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டாமாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வீட்டுமனை பட்டா, திருமண உதவி திட்டம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 356 மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக அளித்தனர். பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட அவர் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுக்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்து குறித்த காலத்திற்குள் மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்குமாறு அறிவுறுத்தினார்.

தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகம் கலெக்டரிடம் மனு ஒன்றை கொடுத்தார். அதில், திருமானூர் ஒன்றியத்தில் 28 வருவாய் கிராமங்களில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இங்கு அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணறு மூலம் விவசாயத்துக்கும், குடி தண்ணீருக்கும் பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்நிலையில், திருமானூர் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த மணல் குவாரியால், நிலத்தடி நீர் மட்டம் குறைந்து, விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் குடிநீர் பஞ்சமும் ஏற்பட்டுள்ளது.

தற்போது மீண்டும் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரிகள் அமைப்பதற்கான பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்களும், கொள்ளிடம் நீர் பாதுகாப்பு இயக்கத்தினரும் அறவழி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படி கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைந்தால், இப்பகுதியில் வாழ முடியாத சூழ்நிலை ஏற்படும். எனவே பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரிகள் அமைப்பதற்கான பணிகளை மேற்கொண்டால், எங்கள் கிராமத்து பகுதி மக்களை வெளிநாட்டுக்கு அகதிகளாக அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

தத்தனூர் குடிக்காட்டை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில், எங்களது கிராமத்தில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றனர். டாஸ்மாக் கடை அமைக்கும் இடத்தின் வழியே தான் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் சென்று வரவேண்டும். மேலும் வயல் வெளிகளுக்கு செல்லும் மக்களும், அவ்வழியாக தான் சென்று வர வேண்டும். எனவே இந்த தத்தனூர் கிராமத்தில் டாஸ்மாக் கடை அமைத்தால் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு இடையூறுகள் மற்றும் பாதிப்பு ஏற்படும். எனவே தத்தனூர் கிராமத்தில் டாஸ்மாக் கடை அமைக்க கூடாது என்று கூறியிருந்தனர்.

தொடர்ந்து உடையார் பாளையம் கோட்டாட்சியர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (பொது, நிலம்), மாவட்ட வழங்கல் அலுவலர், சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் ஆகிய 5 துணை கலெக்டருக்கு மடிக்கணினியை கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் பூங்கோதை, துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

Next Story