டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மனு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கொடுத்தனர்


டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மனு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கொடுத்தனர்
x
தினத்தந்தி 16 July 2018 11:00 PM GMT (Updated: 16 July 2018 7:48 PM GMT)

புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் குன்னகுரும்பியில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று கொண்டார்.

கூட்டத்தில் புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஐ.டி.ஐ. காலனியை சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி பிரியா கொடுத்த மனுவில், நான் முத்துடையான்பட்டியை சேர்ந்தவர்களிடம் வட்டிக்கு ரூ.2 லட்சம் பணம் வாங்கி இருந்தேன். இதையடுத்து நான் தவணை முறையில் இதுவரை சுமார் ரூ.1 லட்சம் வரை செலுத்தி உள்ளேன். மேலும் 1 பவுன் தங்கநகைகளையும் கொடுத்து உள்ளேன். இந்நிலையில் வாங்கிய பணத்திற்கு உடனடியாக வீட்டை எழுதி கொடுக்க வேண்டும் என கடன் கொடுத்தவர்கள் என்னை மிரட்டுகின்றனர்.

மேலும் அவர்கள் அடியாட்களை வைத்து எனது ஆதார் கார்டையும் பறித்து சென்று விட்டனர். இந்நிலையில் வீட்டை நான் அவர்கள் பெயருக்கு எழுதி கொடுக்கவில்லை என்றால், வீட்டை தீ வைத்து கொளுத்தி விடுவதாக மிரட்டுகின்றனர் எனவே இது குறித்து கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

இதேபோல சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. எங்களின் குடிநீர் தேவையை எங்கள் பகுதியில் உள்ள சொக்கா ஊரணி பூர்த்தி செய்து வந்தது. இந்த ஊரணி சுமார் 5 ஏக்கர் பரப்பளவு கொண்டது. தற்போது இந்த ஊரணி தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து பயன்படுத்தி வருகிறார். எனவே இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

இதேபோல புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட செயலாளர் சிவகுமார் கொடுத்த மனுவில், புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகிற 25-ந் தேதி கவர்னர் பன்வாரிலால் புரோகித் வருகை தர உள்ளதாக செய்திகள் வருகின்றன. அவர் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகை தரும்போது, புதிய தமிழகம் கட்சியின் சார்பில் கட்சிக்கொடியை காட்டி வரவேற்று, பல்வேறு பிரச்சினைகள் குறித்து மனு கொடுக்க உள்ளோம். எனவே நாங்கள் கவர்னரை சந்தித்து மனு அளிக்க உரிய அனுமதி வழங்க வேண்டும். என கூறியிருந்தார்.

இதேபோல அறந்தாங்கி தாலுகா குன்னகுரும்பி மற்றும் வடவயல் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், புதுக்கோட்டை-அறந்தாங்கி சாலையில் குன்னகுரும்பி பிரதான சாலையில் இருந்து 100 அடி தூரத்தில் டாஸ்மாக் கடை திறப்பதற்காக அனைத்து முன்னேற்பாடு பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்த பகுதியை சுற்றி சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. டாஸ்மாக் கடை திறக்க உள்ள இடத்தின் வழியாகத்தான் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் தினமும் சென்று வருகின்றனர். எனவே குன்னகுரும்பியில் டாஸ்மாக் கடை திறக்க நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். எனவே எங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கும் முயற்சியை அதிகாரிகள் கைவிட வேண்டும் என கூறியிருந்தனர்.

இதேபோல தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட தலைவர் சோமையா கொடுத்த மனுவில், புதுக்கோட்டை மாவட்டம் மூக்கம்பட்டி கிராமத்தில் சுமார் 58 பேருக்கு பயிர் காப்பீடு தொகை வழங்கப்படவில்லை. எனவே பயிர் காப்பீடு தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

மனுக்களை பெற்று கொண்ட மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். 

Next Story