கிராமங்கள் தோறும் காசநோயை கண்டறியும் நடமாடும் மருத்துவ ஆய்வகம்


கிராமங்கள் தோறும் காசநோயை கண்டறியும் நடமாடும் மருத்துவ ஆய்வகம்
x
தினத்தந்தி 17 July 2018 4:15 AM IST (Updated: 17 July 2018 1:22 AM IST)
t-max-icont-min-icon

காசநோயை கண்டறியும் நடமாடும் மருத்துவ ஆய்வகத்தை புதுக்கோட்டையில் சிறப்பு மாவட்ட வருவாய் அதிகாரி உதயகுமார் தொடங்கி வைத்தார்.

புதுக்கோட்டை,

மாவட்டத்தில் உள்ள கிராமங்கள் தோறும் நேரடியாக சென்று காசநோயை கண்டறியும் வகையில் நடமாடும் மருத்துவ ஆய்வகத்தின் தொடக்க நிகழ்ச்சி நேற்று புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு மாவட்ட வருவாய் அதிகாரி உதயகுமார் கலந்து கொண்டு நடமாடும் மருத்துவ ஆய்வகத்தை கொடியசைத்து தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது, காசநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து முற்றிலுமாக ஒழித்திடும் வகையில்் காசநோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவ கல்லூரிகளில் இலவச பரிசோதனை மற்றும் சிசிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் 2025-க்குள் காசநோய் இல்லாத நிலையை ஏற்படுத்தும் வகையில் கிராமங்கள் தோறும் சென்று காசநோயை பரிசோதிக்கும் CB-N-A-AT என்ற புதிய வகை பரிசோதனை முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த காசநோயை பரிசோதிக்கும் நடமாடும் மருத்துவ ஆய்வகத்தில் உள்ள CB-N-A-AT முறையின் மூலம் சளி பரிசோதனை மேற்கொண்டு 2 மணி நேரத்தில் காசநோயை இருப்பதை கண்டறிந்து உறுதிபடுத்தலாம். மேலும் மருந்துக்கு கட்டுப்படாத காசநோய், சந்தேகமான காசநோய் பாதிப்பு, எச்.ஐ.வி. தொற்று மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு காசநோய் இருப்பதையும் இதன் மூலம் கண்டறியலாம்.

மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் திருத்தி அமைக்கப்பட்ட தேசிய காசநோய் தடுப்பு திட்டத்தின் கீழ் காசநோயை கண்டறியும் நடமாடும் ஆய்வகத்தின் மூலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் நேரடியாக சென்று பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. இருமல் மற்றும் காய்ச்சல், எடை குறைதல், சர்க்கரை வியாதி உள்ளவர்கள், எச்.ஐ.வி-தொற்று உள்ளவர்கள் மற்றும் காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட பல்வேறு நபர்களும் இதன் மூலம் தங்களது இருப்பிடங்களிலேயே காசநோய் பரிசோதனை மேற்கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் சந்திர சேகர், துணை இயக்குனர் (காசநோய்) பெரியசாமி, சுகாதார பணிகள் துணை இயக்குனர்கள் பரணிதரன், கலைவாணி உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story