நான்கு வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் எடுக்க எதிர்ப்பு


நான்கு வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் எடுக்க எதிர்ப்பு
x
தினத்தந்தி 16 July 2018 10:00 PM GMT (Updated: 16 July 2018 7:57 PM GMT)

நான்கு வழிச்சாலை திட்டத்திற்கு உச்சிப்புளி பகுதியில் பிரதான சாலையில் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திரளாக வந்து மனு அளித்தனர்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அதிகாரி முத்துமாரி முன்னிலை வகித்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி நான்கு வழிச்சாலையால் பாதிக்கப்பட்டோர் நலச்சங்கம் சார்பில் தலைவர் சீனிவாசன், செயலாளர் நாகேசுவரன் தலைமையில் ஏராளமானோர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:– தற்போது தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் நான்குவழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்த உள்ளனர். உச்சிப்புளி பகுதி என்பது வளர்ந்து வரும் நகரமாகும். சாலையின் இருபுறமும் கடைகள், வணிக நிறுவனங்கள் நிறைந்து உள்ளன.

இந்த நிலங்களை எடுத்தால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். ஒட்டுமொத்த உச்சிப்புளி நகரமே இல்லாமல் போய்விடும். தற்போது உச்சிப்புளியில் ஒருகிலோ மீட்டர் தூரத்திற்கு விரிவான சாலை உள்ளதால் அதனையே பயன்படுத்தி கொள்ளலாம். அல்லது நகருக்குள் வராமல் குயவன்குடி வழியாக நான்கு வழிச்சாலை அமைக்க முடியும். எனவே நிலத்தை கையகப்படுத்தாமல் மாற்று வழியில் திட்டத்தை நிறைவேற்றி மக்களை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

தமிழ்நாடு தூய்மை தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் தலைவர் ராஜமாணிக்கம் தலைமையில் துப்புரவு தொழிலாளர்கள் அளித்த மனுவில், ராமேசுவரம் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் வேலைபார்த்து வரும் 68 பேருக்கு கடந்த 2 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை என்பதால் உடனடியாக சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர். உச்சிப்புளி அருகே உள்ள நம்பாயிவலசை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதியில் குடியிருப்புகளுக்கு இடையில் மனநல காப்பகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிறுவர், சிறுமியர் அதிகம் உள்ள இந்த பகுதியில் மனநோயாளிகளை தங்க வைத்தால் தேவையில்லாத மனஉளைச்சலும், தொந்தரவுகளும் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

எனவே, இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் மனு கொடுத்தனர். இருமேனி அலைகாத்தவலசையை சேர்ந்த சசிக்குமார் என்பவரின் மனைவி அருள்மொழி தனது குழந்தைகளுடன் வந்து, ஊர்கூட்டத்தில் தங்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளதாகவும், டி.கருங்குளம் அருகே உள்ள பா.இலந்தைகுளம் பகுதியை சேர்ந்த பிரபாகரன் மனைவி ராஜாமணி என்பவர் தங்களது குடும்பத்தினரை ஊரைவிட்டு ஒதுக்கிவைத்து விட்டதாக கூறி மனு கொடுத்தனர். இந்த மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் நடராஜன் இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.


Next Story