தேவகோட்டை அருகே தனியார் நிறுவன ஊழியரை தாக்கி மோட்டார் சைக்கிள், பணம் பறிப்பு
தேவகோட்டை அருகே தனியார் நிறுவன ஊழியரை தாக்கி மோட்டார் சைக்கிள் மற்றும் அவர் வைத்திருந்த ரூ.85 ஆயிரம், செல்போன் உள்ளிட்டவற்றை மர்மநபர்கள் பறித்துச் சென்றனர்.
தேவகோட்டை,
தேவகோட்டை அருகே உள்ள புளியால் கிராமத்தை சேர்ந்தவர் நைனாமுகமது மகன் அஜீத்கான்(வயது 23). இவர் காரைக்குடியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று இவர், நிறுவனத்தில் வாங்கிய கடன் தொகையை வசூலித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தேவகோட்டை–முப்பையூர் சாலையில் இருந்து வாரியன்வயல் சாலையில் திரும்பி கொண்டிருந்தார். அப்போது பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர், அஜீத்கானை வழிமறித்துள்ளனர். பின்னர் அவரை மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே தள்ளிய மர்மநபர்கள் அஜீத்கானை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
பின்னர் அரிவாளை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.85 ஆயிரத்தை அந்த நபர்கள் கொள்ளையடித்தனர். மேலும் அஜீத்கானின் மோட்டார் சைக்கிள், அவர் வைத்திருந்த செல்போன் மற்றும் பல்வேறு ஆவணங்களையும் அவர்கள் எடுத்துச் சென்றனர்.
மர்மநபர்கள் தாக்கியதில் பலத்த காயமடைந்த அஜீத்கான் சிகிச்சைக்காக தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் தேவகோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
தேவகோட்டை பகுதியில் சமீப காலமாக தனியாக செல்லும் நபர்களை வழிமறித்து மிரட்டி பணம், நகை பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. முன்பு வீடுகளில் புகுந்து பணம், நகைகள் கொள்ளையடித்த சம்பவம் ஒருபுறம் அரங்கேறி வரும் நிலையில் தற்போது வழிப்பறி அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.