லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில் மழை: பலத்த காற்றுக்கு மரங்கள் முறிந்து விழுந்தன
லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ததில் மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கூடலூர்,
தேனி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள லோயர்கேம்ப்பில் இருந்து கேரள மாநிலம் குமுளிக்கு மலைப்பாதை வழியாக வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் கூடலூர், குமுளி, தேக்கடி ஆகிய பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதில் குமுளி மலைப்பாதையில் இரைச்சல் பாலம் அருகே உள்ள வளைவு பகுதியில் மரங்கள் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தன. அப்போது அந்த வழியாக வாகனங்கள் எதுவும் செல்லாததால் அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருந்ததால் மரங்கள் முறிந்த பகுதியில் லேசான மண்சரிவு ஏற்பட்டு சிறிய பாறைகள், மண் குவியல்களும் மலைப்பாதையில் விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து தடைபட்டது. குமுளியில் இருந்து தமிழகம் நோக்கி வந்த வாகனங்களும், லோயர்கேம்பில் இருந்து குமுளி நோக்கி சென்ற வாகனங்களும் சாலையில் இருபுறமும் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் அணிவகுத்து நின்றன.
இதுகுறித்து தகவல் அறிந்த லோயர்கேம்ப் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இரவு நேரமாக இருந்ததால் மரங்களை வெட்டி அகற்ற முடியாத நிலை ஏற்பட்டது. உடனே கம்பம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் அங்கு வந்து மரம் அறுக்கும் எந்திரத்தின் மூலம் மரங்களை வெட்டி அகற்றினர். இதனால் அந்த பகுதியில் சுமார் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதிகாலை 4 மணியளவில் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.
தகவலறிந்த தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் நேற்று சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார். பின்னர் சாலை சீரமைப்பு பணிகளை முடுக்கிவிட்டார். மலைப்பாதையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர்.
Related Tags :
Next Story