மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்க உத்தரவு: 8 இடங்களில் பாலம் கட்டும் பணிகள் நிறுத்தப்பட்டது


மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்க உத்தரவு: 8 இடங்களில் பாலம் கட்டும் பணிகள் நிறுத்தப்பட்டது
x
தினத்தந்தி 17 July 2018 4:30 AM IST (Updated: 17 July 2018 3:40 AM IST)
t-max-icont-min-icon

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க உத்தரவிட்டதை தொடர்ந்து தஞ்சை மாவட்டத்தில் ஆறுகளின் குறுக்கே 8 இடங்களில் பாலம் கட்டும் பணிகள் திடீரென நிறுத்தப்பட்டது. மேலும் மணல், ஜல்லி உள்ளிட்ட பொருட்களை உடனே அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்,

மேட்டூர் அணையில் போதிய அளவில் தண்ணீர் இல்லாததால் கடந்த ஜூன் 12-ந்தேதி திறக்கப்படவில்லை. இந்த நிலையில் கர்நாடகாவில் பெய்து வரும் தொடர்மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. மேலும் நீர் வரத்தும் 1 லட்சம் கன அடியை எட்டி உள்ளது.

இந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு வருகிற 19-ந்தேதி நீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் தற்போது காவிரி மற்றும் அரசலாறு, குடமுருட்டி ஆறு, மஞ்சளாறு, திருமலைராஜன் ஆறு ஆகிய ஆறுகளில் 8 இடங்களில் ரூ.22கோடி செலவில் பாலங்கள் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் நபார்டு திட்டத்தின் கீழ் இந்த பாலங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பாலம் கட்டும் பணி

இந்த நிலையில் மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டதையடுத்து தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை உத்தரவின் பேரில் பாலங்கள் கட்டும் பணியை உடனே நிறுத்த மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மந்திராசலம் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி பாலம் கட்டும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆறுகளில் கட்டுமான பணிக்காக குவித்து வைக்கப்பட்டுள்ள ஜல்லி, மணல், இரும்புக்கம்பிகள் உள்ளிட்டவற்றையும் உடனடியாக அப்பறப்படுத்தவும் ஒப்பந்தக்காரர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பாசனத்துக்கு தடை இல்லாமல் தண்ணீர் செல்வதற்கு வசதியாக இதனை மேற்கொள்ளுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அடுத்த இளங்கார்குடியில் காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.5 கோடியிலும், அண்டக்குடி அரசலாற்றில் ரூ.4 கோடியில் பாலம் கட்டும் பணி நிறுத்தப்பட்டு ஆற்றில் குவித்து வைக்கப்பட்டு இருந்த தளவாட பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டதை தஞ்சை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மந்திராசலம் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், “பாசனத்துக்கு தடையில்லாமல் தண்ணீர் செல்லும் வகையில் பாலம் கட்டுமான பணிகளை நிறுத்த உத்தரவிட்டதோடு, ஆறுகளில் குவித்து வைக்கப்பட்டு இருந்த கட்டுமான பொருட்கள் பொக்லின் எந்திரம் மூலம் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. மீண்டும் ஜனவரி மாதம் அணை மூடப்பட்ட பின்னர் கட்டுமான பணிகள் தொடங்கப்படும்”என்றார்.

அப்போது பாபநாசம் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் நாராயணன், அறிவானந்தம், கும்பகோணம் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் ரமேஷ், பூங்குழலி ஆகியோர் உடன் இருந்தனர். 

Next Story