என்.சி.சி. வீரர்கள் ராணுவத்தில் சேர்ப்பு


என்.சி.சி. வீரர்கள் ராணுவத்தில் சேர்ப்பு
x
தினத்தந்தி 17 July 2018 1:45 PM IST (Updated: 17 July 2018 1:45 PM IST)
t-max-icont-min-icon

ராணுவத்தில் பயிற்சியுடன் கூடிய பணிக்கு என்.சி.சி. வீரர்கள் சேர்க்கப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:-

இந்திய ராணுவம் நாட்டின் பாதுகாப்பு அரணாக விளங்கி வருகிறது. பல்வேறு சிறப்பு பயிற்சிகளின் அடிப்படையில் தகுதியான இளைஞர்கள் ராணுவத்தில் சேர்க்கப்பட்டு பயிற்சிக்குப் பின் பணி நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள். தற்போது என்.சி.சி. 45-வது சிறப்பு நுழைவின் அடிப்படையில் பட்டப்படிப்பு படித்த என்.சி.சி. வீரர்களை ராணுவத்தில் சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மொத்தம் 55 பேர் சேர்க்கப்படுகிறார்கள். இதில் ஆண்கள் 50 பேர், பெண்கள் 5 பேர். இந்திய குடியுரிமை பெற்ற, திருமணமான மற்றும் திருமணமாகாத ஆண்கள், திருமணமாகாத பெண்கள் இந்த பயிற்சி யில் சேரலாம். இதில் சேருவதற்கு விண்ணப்பதாரர் பெற்றிருக்க வேண்டிய இதர தகுதி விவரங்கள் கீழே...

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 19 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 2-1-1994 மற்றும் 1-1-2000 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும்.

கல்வித் தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பை 50 சதவீத மதிப்பெண்களுடன் நிறைவு செய்திருக்க வேண்டும். அத்துடன் என்.சி.சி. பயிற்சியில் “சி” சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். பட்டப்படிப்பில் இறுதியாண்டு படித்துக் கொண்டிருப்பவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். இவர்கள் முதல் 2 வருட படிப்பில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:

என்.சி.சி. பயிற்சியில் பெற்றிருக்கும் தகுதியின் அடிப்படையில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்கள் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அவர்கள் ஸ்டேஜ்-1, ஸ்டேஜ்-2 எனும் இரு நிலைகளில் தேர்வுக்கு உட்படுத்தப்படுவார்கள். இதில் குழு தேர்வு, உளவியல் தேர்வு, நேர்காணல் ஆகியவை அடங்கும். இறுதியாக மருத்துவ பரிசோதனை நடைபெறும். அனைத்திலும் தேர்ச்சி பெறுபவர்கள் பயிற்சியில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். அவர்கள் 49 வார கால பயிற்சிக்கு உட்படுத்தப்படுவார்கள். பயிற்சியில் தேர்ச்சி பெறுபவர்கள் லெப்டினன்ட் தரத்திலான அதிகாரி பணியில் நியமனம் பெறலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 2-8-2018-ந் தேதியாகும்.

விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.joinindianarmy.nic.in என்ற இணையதள முகவரியை பார்க்கலாம். 

Next Story