ஆடி செவ்வாய்க்கிழமை: அவ்வையார் அம்மன் கோவிலில் பெண்கள் கூழ், கொழுக்கட்டை படைத்தனர்


ஆடி செவ்வாய்க்கிழமை: அவ்வையார் அம்மன் கோவிலில் பெண்கள் கூழ், கொழுக்கட்டை படைத்தனர்
x
தினத்தந்தி 18 July 2018 4:00 AM IST (Updated: 17 July 2018 8:32 PM IST)
t-max-icont-min-icon

ஆடி முதல் செவ்வாய்க்கிழமையையொட்டி நேற்று அவ்வையார் அம்மன் கோவிலில் பெண்கள் கூழ், கொழுக்கட்டை படைத்தனர். நீண்ட வரிசையில் பெண்கள் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர்.

ஆரல்வாய்மொழி,

ஆடிமாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதம் ஆகும். இந்த மாதங்களில் வரும் செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு மற்றும் விழாக்கள் நடைபெறுவது வழக்கம்.

ஆரல்வாய்மொழி தாழக்குடி அருகே அவ்வையார் அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி மாதம் செவ்வாய்க்கிழமைகளில் அம்மனுக்கு பிடித்தமான உணவு பதார்த்தங்களை படைத்து வழிபட்டால் நினைத்த காரியம் நடக்கும். திருமணம் பாக்கியம் கிடைக்க வேண்டியும், குழந்தை வரம் வேண்டியும் ஏராளமான பெண்கள் இங்கு வந்து வழிபடுவது வழக்கம்.

இதனாலேயே குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவின் பிற பகுதிகளில் இருந்தும் ஏராளமான பெண்கள் இங்கு வந்து வழிபாடு செய்து செல்வார்கள்.

அதன்படி நேற்று ஆடி மாத முதல் செவ்வாய்க்கிழமை தொடங்கியதால் அதிகாலையில் இருந்தே உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பெண்கள் அவ்வையார் அம்மன் கோவிலுக்கு வந்தனர்.

 பின்னர் அவர்கள், கோவில் வளாகத்திலும், அருகில் உள்ள தென்னந்தோப்பிலும் குடும்பம், குடும்பமாக அமர்ந்து தாங்கள் கொண்டு வந்த பொருட்களை வைத்து கூல், கொழுக்கட்டைகளை செய்து அம்மனுக்கு படைத்து, சிறப்பு வழிபாடு நடத்தினர். நண்பகல் 12 மணியளவில் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து கோவிலில் உள்ள கணபதி, முருகன் உள்ளிட்ட சன்னதிகளுக்கும் பூஜை நடந்தது. தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.

முப்பந்தல் இசக்கியம்மன் கோவிலிலும் ஆடி செவ்வாய்க்கிழமையையொட்டி அபிஷேகங்கள், சிறப்பு பூஜை, அன்னதானம் நடைபெற்றது. இதேபோல் ஆலமூடு அம்மன் கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.

இதையொட்டி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் அவ்வையார் அம்மன் கோவில், முப்பந்தல் இசக்கியம்மன் கோவில், ஆலமூடு அம்மன் கோவில்களுக்கு பக்தர்கள் நலன்கருதி சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

Next Story