எங்கள் முதுகெலும்பை உடைத்து 8 வழி பசுமை சாலை திட்டத்தை செயல்படுத்த வேண்டுமா? விவசாயிகள் கதறல்


எங்கள் முதுகெலும்பை உடைத்து 8 வழி பசுமை சாலை திட்டத்தை செயல்படுத்த வேண்டுமா? விவசாயிகள் கதறல்
x
தினத்தந்தி 17 July 2018 11:00 PM GMT (Updated: 17 July 2018 6:39 PM GMT)

எங்கள் முதுகெலும்பை உடைத்து 8 வழி பசுமை சாலை திட்டத்தை செயல்படுத்த வேண்டுமா? என்று கருத்து கேட்பு கூட்டத்தில் டாக்டர் அன்புமணிராமதாஸ் எம்.பி.யிடம் விவசாயிகள் கதறலுடன் கேள்வி எழுப்பினார்கள்.

அரூர்,

சேலம்- சென்னை 8 வழி பசுமை சாலை திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை நேரில் சந்தித்து கருத்து கேட்பு கூட்டம் அரூர் தாலுகா முத்தானூர் கிராமத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் வெங்கடேஸ்வரன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில செயலாளர் வேலுச்சாமி, மாநில துணைத்தலைவர்கள் பாடிசெல்வம், சாந்தமூர்த்தி, அரசாங்கம், குமரன், மாநில அமைப்பு துணை செயலாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் இமயவர்மன் வரவேற்றார்.

இந்த கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு கருத்து கேட்டார். இந்த கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள், பெண்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு 8 வழி பசுமை சாலை திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என்று கண்ணீர் மல்க கதறலுடன் சரமாரியாக கேள்விகளை எழுப்பி தங்கள் கருத்துக்களை தெரிவித்து கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:-

8 வழி பசுமை சாலை இந்த பகுதியில் விவசாயிகளின் வாழ்வாதாரமான விவசாய நிலங்களை அழித்து அமைக்கப்பட உள்ளது. இந்த சாலையால் பொதுமக்கள், விவசாயிகளுக்கு எந்தவித பயனும் இல்லை. இந்த சாலை இப்போது இங்கே தேவையும் இல்லை. சில ஏக்கர் நிலங்களை மட்டுமே வைத்துள்ள சிறுகுறு விவசாயிகளான நாங்கள் எங்கள் விவசாய நிலங்களை இழந்தால் எங்கள் பெண் குழந்தைகளுக்கு எப்படி திருமணம் செய்து வைக்க முடியும்? பல இடங்களில் ஏற்கனவே சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கே 10 ஆண்டுகள் ஆனபிறகும் இழப்பீட்டு தொகையை முழுமையாக கிடைக்காமல் உள்ளது. எங்கள் மண் எங்கள் உயிர். எங்கள் முதுகெலும்பை உடைத்து இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டுமா? என கூறினர்.

இந்த கூட்டத்தில் மாணவ-மாணவிகள் கொடுத்த கோரிக்கை மனுவில், எம்.தாதம்பட்டி பகுதியில் பொதுமக்கள் பங்களிப்புடன் கட்டப்பட்ட அரசு உயர்நிலைப்பள்ளி கட்டிடம் சாலை அமைக்கும் பணிக்காக இடிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த பள்ளி கட்டிடத்தை இடிக்காமல் மாற்றுவழியில் சாலை அமைக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இந்த கூட்டத்தில் கண்ணீர் மல்க கருத்து தெரிவித்த விவசாயிகளுக்கு டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. ஆறுதல் கூறினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

8 வழி பசுமை சாலைக்கு 96 சதவீத விவசாயிகள் தாமாக முன்வந்து நிலங்களை அளித்ததாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி இருப்பது பொய். இந்த சாலைக்கு விவசாயிகள் யாரும் நிலங்களை தர முன்வரவில்லை. இந்த சாலையால் சேலத்தில் இருந்து சென்னைக்கு செல்லும் தூரத்தில் 1 கி.மீ. மட்டுமே குறைகிறது. இந்த சாலையில் 8 இடங்களில் அமைக்கப்படும் டோல்கேட்டுகளை பொதுமக்கள் கட்டணம் செலுத்தியே கடந்து செல்ல முடியும். இந்த சாலையின் இருபுறங்களிலும் உள்ள கிராமங்களுக்கு செல்ல உரிய சாலை வசதி இல்லை. இந்த சாலையால் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமே பயன் கிடைக்கும்.

சேலத்தின் மக்கள்தொகை 9 லட்சம். சேலத்தில் இருந்து சென்னைக்கு சாலை போக்குவரத்து, விமான போக்குவரத்து, ரெயில் போக்குவரத்து ஆகியவை போதிய அளவில் உள்ளன. ஒருநாளில் 80 ஆயிரம் வாகனங்கள் கடந்தால் மட்டுமே 8 வழிசாலை அமைக்க வேண்டும். தற்போது பசுமை சாலை அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள பகுதியில் உள்ள சாலைகளில் ஒருநாளில் 29 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வாகனங்களே கடந்து செல்கின்றன. எனவே ஏற்கனவே உள்ள சாலைகளை விரிவுபடுத்தினாலே போதுமானது.

ஆனால் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்தி இந்த 8 வழி பசுமை சாலை அமைக்கும் திட்டம் தேவையில்லாதது. இந்த திட்டத்தை அரசியல் ரீதியாகவும், சட்டரீதியாகவும் எதிர்த்து பா.ம.க. போராடும். இந்த திட்டத்தால் விவசாயிகள், பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள துன்பங்கள், பாதிப்புகளை பாராளுமன்றத்தில் எடுத்து கூறி இந்த திட்டத்தை தவிர்க்க குரல் கொடுப்பேன். மத்திய சாலை போக்குவரத்து மந்திரியையும் சந்தித்து பேசுவேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சண்முகம், மாவட்ட தலைவர் மதியழகன், நிர்வாகிகள் அன்னை முருகேசன், அய்யப்பன், திருவேங்கடம், அரூர் நகர செயலாளர் அப்துல்சுகுர் உள்பட பா.ம.க.நிர்வாகிகள், சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். 

Next Story