கிருஷ்ணகிரி அணை புதிய ஷட்டரில் வெல்டிங் பணிகள் நிறைவு


கிருஷ்ணகிரி அணை புதிய ஷட்டரில் வெல்டிங் பணிகள் நிறைவு
x
தினத்தந்தி 18 July 2018 4:15 AM IST (Updated: 18 July 2018 12:21 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி அணையில் புதிய ஷட்டரில் வெல்டிங் பணிகள் நிறைவடைந்தன.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அணையில் பிரதான முதல் மதகில் உள்ள ஷட்டரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 29-ந் தேதி உடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து ரூ.30 லட்சம் மதிப்பில், 12 அடி உயரத்திற்கு தற்காலிக ஷட்டர் அமைக்கப்பட்டு, ‘சீல்’ வைக்கப்பட்டது. இதையடுத்து புதிய ஷட்டர் அமைக்க அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து, தற்காலிக ஷட்டர் அகற்றும் பணிகள் கடந்த மாதம் 8-ந் தேதி தொடங்கி, 10-ந் தேதி நிறைவடைந்தது.

இதைத்தொடர்ந்து ரூ.3 கோடி மதிப்பில் புதிய ஷட்டர் அமைக்கும் பணிகள் தொடங்கியது. இதில் முதற்கட்டமாக, 40 அடி அகலத்திற்கு 20 அடி உயரத்திற்கு தகடுகள், ரோலர்கள், இணைப்பு சங்கிலி, பக்கவாட்டு சுவர் சீரமைப்பு பணிகள் கடந்த 7-ந் தேதி நிறைவு பெற்றது. இதையடுத்து மதகில் பொருத்தப்பட்டுள்ள இரும்பு தளவாடங்களை கியாஸ் வெல்டிங் மூலம் இணைக்கும் பணிகள் நடந்தன. இதில் 15-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் 24 மணி நேரம் சுழற்சி முறையில் ஈடுபட்டனர். இந்த பணிகள் நேற்றுடன் முடிந்தன.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் வெல்டிங் பணிகளில் தாமதம் ஏற்பட்டது. அந்த பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளது. தொடர்ந்து, வெல்டிங் வைக்கப்பட்ட இடத்தில் கிரைன் செய்யும் பணிகள் நடக்கிறது. ஒரிரு நாட்களில் அப்பணிகள் முடிவடையும். தொடர்ந்து ஷட்டரில் வர்ணம் பூசும் பணிகள் நடக்கும்.

இந்த மாத இறுதிக்குள் முழுமையாக பணிகள் முடிவடைந்து பயன்பாட்டிற்கு வரும். தற்போது கிருஷ்ணகிரி அணையில் இருந்து இடது மற்றும் வலதுபுறக்கால்வாய் மூலம் முதல்போக பாசனத்திற்கு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 

Next Story