அரசு அலுவலகங்களில் நாளை முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை கலெக்டர் அறிவிப்பு


அரசு அலுவலகங்களில் நாளை முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை கலெக்டர் அறிவிப்பு
x
தினத்தந்தி 17 July 2018 10:45 PM GMT (Updated: 17 July 2018 7:01 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் நாளை முதல் ஒருமுறை பயன்படுத்தி விட்டு வீசக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதாக கலெக்டர் ஆசியா மரியம் அறிவித்து உள்ளார்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஒருமுறை பயன்படுத்திவிட்டு வீசக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடுகளை தடை செய்வதற்கான முன்னேற்பாடு கூட்டம் நேற்று கலெக்டர் ஆசியா மரியம் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களால் மாறி வரும் தட்பவெப்ப சூழல், கடல் உயிரினங்கள் பாதிக்கப்படுவது, விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும் குறும்படமும் திரையிடப்பட்டது. பின்னர் கலெக்டர் பேசும்போது கூறியதாவது :-

பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு குறித்து பல்வேறு விழிப்புணர்வுகள் அரசுத் துறைகளின் மூலமும், தனியார் தொண்டு நிறுவனங்களும் தொடர்ந்து ஏற்படுத்தி வந்தாலும், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் கொசுக்கள் உற்பத்தி, நீர்நிலை மாசுபடுதல் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசு வருகிற 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மக்காத பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் தாள்கள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் தேநீர் மற்றும் தண்ணீர் குவளைகள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல் மற்றும் பிளாஸ்டிக் கைப்பைகள், கொடிகள் ஆகியவற்றை பயன்படுத்துதல் மற்றும் சேமித்து வைத்தலை தடை செய்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

எனவே பிளாஸ்டிக் பொருட்களை பொதுமக்கள் பயன்படுத்துவதில் இருந்து மாற்றி, துணிப்பைகள் பயன்பாடு மற்றும் இயற்கை பொருட்களை பயன்படுத்த அனைத்து துறைகளும் தங்கள் பகுதியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

அரசு அலுவலர்கள் தங்கள் அலுவலகங்களில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை முற்றிலும் நிறுத்த வேண்டும். அதன் அடிப்படையில் நாமக்கல் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட அனைத்து துறை அரசு அலுவலகங்களிலும் நாளை (வியாழக்கிழமை) முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு முற்றிலும் தடைசெய்யப்படுகிறது. பொதுமக்களும், வணிகர்களும் பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக நாமக்கல் மாவட்டத்தை உருவாக்க முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப்பைகளை பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் தயாரிக்கப்பட்ட துணிப்பைகளை கலெக்டர் ஆசியா மரியம், வெளியிட அதனை ஊரக வளர்்ச்சி முகமை திட்ட இயக்குனர் மாலதி பெற்றுக்கொண்டார். இதில் வருவாய்த்துறை, சுற்றுச்சூழல் துறை, உணவு பாதுகாப்புத்துறை, நகராட்சிகள், பேரூராட்சிகள் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story