மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து புரசைவாக்கம், பெரம்பூரில் கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டம்
மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து புரசைவாக்கம், பெரம்பூரில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. மேலும் வியாபாரிகள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை,
சென்னையில் மெட்ரோ ரெயில் திட்டத்தால் சாலை விரிவாக்கம் என்ற பெயரில் கடைகள் மூடப்படும் அபாயம் இருப்பதாக கூறி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை கடையடைப்பு போராட்டத்தை அறிவித்தது.
அதன்படி சென்னையின் வியாபார தலங்களான புரசைவாக்கம், பெரம்பூர், ஓட்டேரி, பட்டாளம் ஆகிய பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் நேற்று தங்கள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் இப்பகுதிகள் நேற்று விடுமுறை தினம் போல களை இழந்து காணப்பட்டன. மருந்தகங்கள் தவிர பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. பெரம்பூர் எம்.எச்.சாலை மற்றும் ஓட்டேரி ஸ்டிரான்ஸ் சாலையில் வியாபாரிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சென்னை புரசைவாக்கம் தாணா தெருவில் புரசை வியாபாரிகள் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. சங்கத்தின் தலைவர் நாகபூஷணம் தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். முன்னதாக ஆர்ப்பாட்டம் நடந்தது.
மேலும் வியாபாரிகள் ‘எங்கள் நிலம் எங்கள் உரிமை’ என்ற வாசகம் அடங்கிய கருப்பு உடைகளை அணிந்திருந்தனர். கருப்பு பலூன்களும் பறக்க விடப்பட்டன.
போராட்டம் குறித்து த.வெள்ளையன் நிருபர்களிடம் கூறியதாவது:–
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மாதவரம்– சிறுசேரி வரையிலான மெட்ரோ ரெயில் வழித்தடம் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அதில் மாதவரத்தில் இருந்து பெரம்பூர், அயனாவரம் வழியாக ஓட்டேரி, பிரக்ளிங் சாலை, புரசைவாக்கம் (மில்லர்ஸ் ரோடு சந்திப்பு) வழியாக கீழ்ப்பாக்கத்தில் (கே.எம்.சி.) இணைவதாக இருந்தது.
ஆனால் சில மாதங்களுக்கு முன்பு அந்த இணையதளத்தில் புதிய வரைபடம் வெளியிடப்பட்டு உள்ளது. அதில் அயனாவரத்தில் இருந்து பட்டாளம் வழியாக பெரம்பூர் பேரக்ஸ் ரோடு, டவ்டன் சந்திப்பு (புரசைவாக்கம் நெடுஞ்சாலை), மில்லர்ஸ் ரோடு சந்திப்பு வழியாக கீழ்ப்பாக்கம் (கே.எம்.சி.) சென்றடைவதாக வழித்தட விவரம் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த வழித்தட மாற்றத்துக்கு வடமாநில கார்ப்பரேட் கம்பெனிகளின் சுயலாபமும், சதிவேலையும் தான் காரணம்.
இந்த புதிய வழித்தட மாற்றத்தால் புரசைவாக்கம் நெடுஞ் சாலையில் உள்ள 500–க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்படும். அதேபோல ஓட்டேரி, பெரம்பூரிலும் ஏராளமான கடைகள் அகற்றப்படும் நிலை ஏற்படும். இதனால் ஆயிரக்
கணக்கான வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். தவிர புரசைவாக்கத்தை சுற்றி ஏற்கனவே நேரு பூங்கா, எழும்பூர், சென்டிரல் என 3 மெட்ரோ ரெயில் நிலையங்கள் உள்ளன.
இந்தநிலையில் டவ்டன், புரசைவாக்கம் (மில்லர்ஸ் ரோடு) எனும் ரெயில் நிலையங்களை வெறும் 600 மீட்டர் இடைவெளியில் அமைக்க என்ன தேவை இருக்கிறது? எனவே முதன்முதலில் அறிவிக்கப்பட்ட அந்த வரைபடத்தின்படியே மெட்ரோ ரெயில் நிலைய பணி நடக்க வேண்டும். இல்லையெனில் இப்பகுதியில் மெட்ரோ ரெயில் நிலையம் அமைய விடமாட்டோம். அடுத்தக்கட்ட போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story