கார் – டிராக்டர் மோதல் கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள் 2 பேர் பலி; இருவருக்கு தீவிர சிகிச்சை


கார் – டிராக்டர் மோதல் கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள் 2 பேர் பலி; இருவருக்கு தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 18 July 2018 3:00 AM IST (Updated: 18 July 2018 1:32 AM IST)
t-max-icont-min-icon

முல்பாகல் அருகே கார் மீது டிராக்டர் மோதிய விபத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள் 2 பேர் பலியானார்கள்.

கோலார் தங்கவயல், 

முல்பாகல் அருகே கார் மீது டிராக்டர் மோதிய விபத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள் 2 பேர் பலியானார்கள். 2 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். விபத்தில் சிக்கிய அனைவரும் பெங்களூருவைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள்

பெங்களூரு ஜே.பி. நகர் சாணக்கியா விரிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சிவா(வயது 26). இவரது நண்பர்கள் ராஜராஜேஸ்வரி நகர் பகுதியைச் சேர்ந்த கிரண்(25), சம்பங்கி ராம்நகர் பகுதியைச் சேர்ந்த பரத், கேனேகனகுண்டே பகுதியைச் சேர்ந்த மகேஷ்(28). இவர்கள் அனைவரும் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயர்களாக பணியாற்றி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இவர்கள் பெங்களூருவில் இருந்து திருப்பதிக்கு காரில் புறப்பட்டனர். இவர்கள் கோலார் மாவட்டம் முல்பாகல் டவுன் காந்தராஜ் சர்க்கிள் அருகே பெங்களூரு–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த ஒரு டிராக்டர், எதிர்பாராத விதமாக அவர்களுடைய கார் மீது மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது.

2 பேர் பலி

இதில் காரில் இருந்த சிவா உள்பட 4 பேரும் படுகாயம் அடைந்தனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய சிவாவும், கிரணும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மகேசும், பரத்தும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அவர்களை அப்பகுதியினர் மீட்டு சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து முல்பாகல் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து பலியான சிவா மற்றும் கிரணின் உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர் அவர்களுடைய உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்து முல்பாகல் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story