கர்நாடகத்தில் தொடர் கனமழை மங்களூரு, உடுப்பி மாவட்டங்களில் கடல் சீற்றம்; 41 வீடுகள் சேதம்
கர்நாடகத்தில் தொடர் கனமழையால் மங்களூரு, உடுப்பி மாவட்டங்களில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் தொடர் கனமழையால் மங்களூரு, உடுப்பி மாவட்டங்களில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் 41 வீடுகள் சேதமடைந்தன. மேலும் நீர்வீழ்ச்சிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தொடர் கனமழைகர்நாடகத்தில் மே மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. பருவமழை தொடங்கிய முதல் நாளிலேயே கர்நாடக கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, கார்வார் பகுதிகளில் வரலாறு காணாத மழை கொட்டி தீர்த்தது. இதனால் மங்களூரு நகரத்தையே மழை வெள்ளம் சூழ்ந்துகொண்டது. மேலும் மாநிலத்தில் பெங்களூரு, குடகு, சிக்கமகளூரு, சிவமொக்கா உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கனமழை கொட்டியது. மேலும் கர்நாடகத்தில் உள்ள முக்கிய அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.
அதன்பின்னர் 2 வாரங்களுக்கு போதிய மழை இல்லாமல் இருந்து வந்தது. நன்கு வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்த நிலையில் கடந்த மாதம் (ஜூன்) இறுதியில் இருந்து கர்நாடக கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, கார்வார் மற்றும் மலைநாடுகளான குடகு, சிக்கமகளூரு, சிவமொக்கா, ஹாசன் மற்றும் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது.
தரைமட்ட பாலம் மூழ்கியதுஇதை தவிர மாநிலத்தில் பல்வேறு இடங்களிலும் கனமழை கொட்டி வருகிறது. குறிப்பாக, குடகு, சிக்கமகளூரு, ஹாசன் மற்றும் தட்சிண கன்னடா ஆகிய பகுதிகளில் இடைவிடாது பலத்த மழை கொட்டி வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்து, அந்தப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். மேலும் ஏராளமான பகுதிகளை மழைவெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் சாலைகளில் மழைவெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
சிக்கமகளூரு மாவட்டத்தில் சிருங்கேரி, கொப்பா, மூடிகெரே பகுதியில் பலத்த மழை கொட்டுகிறது. இதனால், மூடிகெரே தாலுகா கலசா–ஒரநாடு இடையே பத்ரா ஆற்றின் குறுக்கே உள்ள தரைமட்ட பாலத்தை மூழ்கடித்தப்படி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கடந்த ஒரு மாதத்தில் இந்த பாலத்தில் 7–வது முறையாக வெள்ளம் கரைபுரண்டு ஓடுவது குறிப்பிடத்தக்கது. மேலும் சிக்கமகளூருவில் ஓடும் பத்ரா, துங்கா, ஹேமாவதி அணைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
41 வீடுகள் சேதம்இதேபோல, தட்சிண கன்னடா மாவட்டத்திலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மேலும் பலத்த காற்றும் வீசுவதால், அரபிக்கடலில் சீற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால், கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள சீற்றம் காரணமாக, உல்லால், முக்கச்சேரி உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் 35 வீடுகளில் விரிசல் விழுந்துள்ளது. 6 வீடுகள் இடிந்துள்ளன. மொத்தம் 41 வீடுகள் சேதமடைந்தன. அரபிக்கடலில் சீற்றம் அதிகமாக இருப்பதால், கடற்கரை கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்துகொடுக்கப்பட்டுள்ளது.
உடுப்பி மாவட்டத்திலும் கடலின் சீற்றம் அதிகமாகவே காணப்பட்டது. இதனால், மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை. கடற்கரையொட்டி கடலோர காவல்படையினர் ரோந்து சென்று சுற்றுலா பயணிகள், மீனவர்கள் யாரையும் அனுமதிக்கவில்லை.
200 ஆண்டுகள் பழமையான பாலம்ஹாசன், சிவமொக்காவிலும் நேற்று கனமழை நீடித்தது. ஹாசனில் சூறைக்காற்றுடன் பலத்த மழை கொட்டியதால், ஏராளமான மரங்களும், மின்கம்பங்களும் சாய்ந்து விழுந்தன. குறிப்பாக சக்லேஷ்புரா தாலுகாவில் மட்டும் நேற்று ஒரே நாளில் 150 மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. எசலூர் கிராமத்தில் 2 டிரான்ஸ்பார்மர் பழுதானதால், மாவட்டத்தில் ஏராளமான கிராமங்கள் நேற்று முன்தினம் இருளில் மூழ்கின. கொனனூர், கெத்தூர், தொடகரஹல்லா உள்ளிட்ட பகுதிகளில் 4 வீடுகள் இடிந்து விழுந்தன. அதிர்ஷ்டவசமாக வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
இதேபோல, சிவமொக்கா மாவட்டத்தில் ஒசநகர், தீர்த்தஹள்ளி பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால், சாலைகளில் மழைவெள்ளம் கரைபுரண்டு ஓடியது. ஆகும்பே பகுதியில் பலத்த மழை கொட்டியதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் தாலுகா சிவனசமுத்திரா பகுதியில் காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், 200 ஆண்டுகள் பழமையான வெஸ்லி பாலம் இடிந்து விழுந்தது. இதனால் அந்தப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீர்வீழ்ச்சிகளில் வெள்ளம்கர்நாடகத்தில் தொடர்ந்து பெய்து வரும் தொடர் கனமழையால் முக்கிய அணைகளான கபினி, கே.ஆர்.எஸ்., ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அந்த அணைகள் நிரம்பும் நிலையில் உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதன்காரணமாக விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதேபோல, மண்டியா மாவட்டத்தில் உள்ள ககனசுக்கி, சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகாலில் உள்ள பரசுக்கி நீர்வீழ்ச்சிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீர்வீழ்ச்சிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரை பார்ப்பதற்காக கர்நாடகம் மட்டுமின்றி தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். நீர்வீழ்ச்சிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது. சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சிகளுடன் ‘செல்பி’ எடுத்து மகிழ்ந்து செல்கிறார்கள்.
மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணாவில் உள்ள ரங்கனதிட்டு பறவைகள் சரணாலய பகுதியில் ஓடும் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், 3–வது நாளாக நேற்றும் படகு சவாரிக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அங்கு வந்து காவிரி ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தை பார்த்து ரசித்து செல்கிறார்கள்.
இதேபோல, சிவமொக்கா மாவட்டம் சாகரில் உள்ள ஜோக் நீர்வீழ்ச்சியிலும் அதிகளவு தண்ணீர் கொட்டுகிறது. மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா மற்றும் பாண்டவபுரா தாலுகாக்களில் காவிரி ஆற்றையொட்டி உள்ள 25–க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ள நீர் புகுந்தது. அவர்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
5 நாட்கள் மழை நீடிக்கும்கர்நாடகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநிலத்தில் இன்னும் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கர்நாடக கடலோர மாவட்டங்கள், மலைநாடுகளான குடகு, சிக்கமகளூரு, சிவமொக்கா ஆகிய பகுதிகளில் அதிகப்படியான மழையும், உள்மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யும் என்று தெரிவித்துள்ளது.