பெங்களூருவில் கன்னட–தமிழ் பள்ளியில் புதிய கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டுவிழா கல்வித்துறை மந்திரி என்.மகேஷ் கலந்துகொண்டார்
பெங்களூருவில் கன்னட, தமிழ் பள்ளியில் புதிய கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டுவிழா நடந்தது.
பெங்களூரு,
பெங்களூருவில் கன்னட, தமிழ் பள்ளியில் புதிய கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டுவிழா நடந்தது. இதில் கல்வித்துறை மந்திரி என்.மகேஷ் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார்.
புதிய கட்டிடம்பெங்களூரு சிவாஜிநகர் வசந்த்நகரில் அரசு கன்னட–தமிழ் உயர் தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. அந்த பள்ளியில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் பள்ளி கல்வித்துறை மந்திரி என்.மகேஷ் கலந்து கொண்டு, புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார். இதில் காங்கிரசை சேர்ந்த ரோஷன் பெய்க் எம்.எல்.ஏ., பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் ஷாலினி ரஜனீஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு மந்திரி என்.மகேஷ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
மாணவ–மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டத்திற்கு கல்வித்துறை சார்பில் 25 சதவீத நிதியை வழங்க தயாராக இருக்கிறோம். இந்த விஷயத்தில் முதல்–மந்திரி குமாரசாமி ஆலோசித்து முடிவு எடுப்பார். இதில் சிறிது காலதாமதம் ஏற்பட்டுள்ளது. ஆயினும் இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டத்தை அமல்படுத்துவோம்.
பணி இடமாறுதல்பள்ளி ஆசிரியர்கள் பணி இடமாறுதல் குறித்து இன்னும் 2 வாரத்தில் கலந்தாய்வு நடத்தப்படும். இந்த ஆண்டு புதிதாக 175 அரசு(பப்ளிக்) பள்ளிகளை தொடங்க முடிவு செய்துள்ளோம். இந்த பள்ளிகளில் 1–ம் வகுப்பு முதல் 10–ம் வகுப்பு வரை வகுப்புகள் இடம் பெறும். இந்த பள்ளிகளில் அனைத்து விதமான வசதிகளும் செய்து கொடுக்கப்படும்.
ஆசிரியர்கள் குழந்தைகளை தங்களின் குழந்தைகள் என்று கருதி பாடம் கற்பிக்க வேண்டும். உலகில் போட்டிகளை எதிர்க்கொள்ளும் வகையில் குழந்தைகளை தயார்படுத்த வேண்டும். மாணவர்களிடம் சாதகமான விஷயங்களை எடுத்துச் சொல்ல வேண்டும். அரசு பள்ளியை பற்றி தாழ்வாக கருதும் போக்கை கைவிட வேண்டும்.
இவ்வாறு என்.மகேஷ் கூறினார்.