ஆக்கிரமிப்புகள் அகற்றம்: பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு மாற்று இடம் கேட்டு கடையடைப்பு


ஆக்கிரமிப்புகள் அகற்றம்: பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு மாற்று இடம் கேட்டு கடையடைப்பு
x
தினத்தந்தி 17 July 2018 10:24 PM GMT (Updated: 17 July 2018 10:24 PM GMT)

திருக்கோவிலூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு மாற்று இடம் கேட்டு நேற்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் நகர்பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த கடைகள், தள்ளுவண்டி கடைகள் என்று அனைத்தும் அதிரடியாக அகற்றப்பட்டன. இதனால் பாதிக்கப்பட்ட சுமார் 400-க்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் தங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட தங்களுக்கு போலீஸ் நிலையம் அருகே உள்ள காந்தி நினைவு மண்டபத்தில் இடம் ஒதுக்கி தரவேண்டும், அதுவரையில் ஏற்கனவே தாங்கள் வியாபாரம் செய்த இடத்திலேயே தொடர்ந்து வியாபாரம் செய்ய அனுமதி அளித்து, தங்களது வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, நேற்று ஒரு நாள் முழு அடைப்பு போராட்டத்துக்கு திருக்கோவிலுார் நகர காய், கனி வியாபாரிகள் சங்கம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

அதன்படி, நேற்று நகரில் காய்கறி, பழம் மற்றும் பூக்கடைகள் மற்றும் மளிகை, நகை, உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில், ஏராளமான போலீசார் நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

இந்த நிலையில், 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் முன்னாள் பேரூராட்சி தலைவர் விநாயகமூர்த்தி தலைமையில் பேரூராட்சி அலுவலகத்திற்கு ஒன்று திரண்டு சென்றனர். அங்கு செயல் அலுவலர் ஜெயராமனிடம், ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட போது பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு காந்தி நினைவு மண்டபத்தில் நிரந்தர கடைகள் தர வேண்டும், அதுவரையில் ஏற்கனவே இருந்த இடத்தில் வியாபாரம் செய்யவும் அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

அப்போது வக்கீல் ரஜினிகாந்த், உலகளந்த பெருமாள் கோவில் கோபுரத்தை மறைக்கும் வகையில் அந்த பகுதியில் ஷெட் போடுவதை கைவிட வேண்டும். இல்லையெனில் வழக்கு தொடருவோம் என்று தெரிவித்தார். அனைவரது கருத்தையும் கேட்ட செயல் அலுவலர் ஜெயராமன் இதுகுறித்து, மாவட்ட கலெக்டரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் பேரூராட்சி அலுவலக பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story