திண்டுக்கல்லில், நிதி நிறுவனம் மூலம் ரூ.80 லட்சம் மோசடி செய்த பெண் மேலாளர்


திண்டுக்கல்லில், நிதி நிறுவனம் மூலம் ரூ.80 லட்சம் மோசடி செய்த பெண் மேலாளர்
x
தினத்தந்தி 18 July 2018 9:30 PM GMT (Updated: 18 July 2018 6:18 PM GMT)

திண்டுக்கல்லில், நிதி நிறுவனம் மூலம் பெண் மேலாளர் ரூ.80 லட்சம் மோசடி செய்ததாக கூறி, அந்த நிறுவனத்தை ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டனர்.

திண்டுக்கல், 

திண்டுக்கல்-நத்தம் சாலையில் குள்ளனம்பட்டியில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வந்தது. அந்த நிதி நிறுவனத்தை நேற்று காலையில் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் திடீரென்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த நகர் வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதுகுறித்து அங்கு பணியாற்றும் ஊழியர்கள் கூறியதாவது:-

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை தலைமையிடமாக கொண்டு குள்ளனம்பட்டியில் நிதிநிறுவனம் ஒன்று தொடங்கப்பட்டது. அதில் பணியாற்றிய பெண் மேலாளர் ஒருவர் திண்டுக்கல் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள மக்களிடம் கூறும்போது, இந்த நிறுவனத்தின் மூலம் சுயதொழில் தொடங்குதல், தனிநபர் கடன், சுயஉதவி குழுக்களுக்கு கடன் வழங்குதல், மேலும் மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் பல்வேறு மானியங்களை பெற்று வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்த நிறுவனம் நபார்டு வங்கியுடன் விரைவில் இணைக்கப்பட உள்ளது. இதையடுத்து இது மத்திய அரசு நிறுவனமாகிவிடும். இங்கு வேலை செய்யும் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்பட்டு மத்திய அரசு ஊழியர்களாக மாற்றப்படுவார்கள். இந்த நிறுவனத்தில் வேலைக்கு சேர வேண்டும் என்றால் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் தர வேண்டும். அது சம்பந்தப்பட்டவரின் பெயரில் டெபாசிட் செய்யப்படும். அந்த பணத்தையும் விரைவில் திருப்பி கொடுத்துவிடுவோம். முதல் 3 மாதங்களுக்கு சம்பளமாக ரூ.5 ஆயிரத்து 500 வழங்கப்படும். அதன் பின்னர் ரூ.12 ஆயிரத்து 500 வழங்கப்படும், என்றார். இதனை உண்மை என்று நம்பிய நாங்கள் பெற்றோர்கள் மூலம் வட்டிக்கு பணம் வாங்கி இந்த நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தோம். அதன்படி 37 பேர் தலா ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் செலுத்தி பல்வேறு பணிகளில் சேர்ந்துள்ளோம்.

மேலும் திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு சென்று நிதி நிறுவனத்துக்கு வாடிக்கையாளர்களை சேர்த்துவிட்டோம். அவர்கள் சுமார் ரூ.40 லட்சம் வரை இங்கு டெபாசிட் செய்துள்ளனர். மொத்தம் ரூ.80 லட்சம் வரை அந்த மேலாளர் மோசடி செய்துள்ளார். இந்த நிலையில் கடந்த 4 மாதங்களாக அந்த நிதி நிறுவனம் பூட்டியே கிடக்கிறது.

மேலாளரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. தலைமை அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்டால் நடவடிக்கை எடுப்பதாக கூறுகின்றனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தரவில்லை. இதனால் வாடிக்கையாளர்கள் எங்களிடம் பணத்தை கேட்கின்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Next Story