டிபன் பாக்சை கழுவிய போது பரிதாபம் கிணற்றுக்குள் தவறி விழுந்து பள்ளி மாணவன் பலி


டிபன் பாக்சை கழுவிய போது பரிதாபம் கிணற்றுக்குள் தவறி விழுந்து பள்ளி மாணவன் பலி
x
தினத்தந்தி 19 July 2018 4:45 AM IST (Updated: 19 July 2018 1:28 AM IST)
t-max-icont-min-icon

டிபன் பாக்சை கழுவிய போது கிணற்றுக்குள் தவறி விழுந்து பள்ளி மாணவன் பலியானான். உடலை ஆம்புலன்சில் ஏற்ற விடாமல் பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

தோகைமலை,

கரூர் மாவட்டம் தோகைமலை அருகே தொண்டமாங்கிணம் ஊராட்சியை சேர்ந்தது விரிட்டிகவுண்டனூர் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவரது மகன் தினேஷ்குமார் (வயது 12). இவன் கவுண்டம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்தநிலையில் நேற்று காலையில் வழக்கம் போல் மாணவன் தினேஷ்குமார் பள்ளிக்கு சென்றான். மதிய உணவு இடைவேளையின் போது, மாணவர்கள் பள்ளியில் அமர்ந்து சாப்பிட்டனர். பள்ளியில் குடிநீர் வசதி இல்லாததால் மதிய உணவு சாப்பிட்ட பள்ளி மாணவர்கள் அனைவரும் அருகில் இருந்த வீடுகள் மற்றும் விவசாய கிணறுகளில் தட்டு மற்றும் டிபன் பாக்சுகளை கழுவினர்.

அப்போது தினேஷ்குமார் மற்றும் சக மாணவர்கள் அருகில் இருந்த விவசாய கிணற்றில் இறங்கி தங்கள் தட்டு மற்றும் டிபன் பாக்சை கழுவினர். தினேஷ்குமார் தனது டிபன் பாக்சை கிணற்றில் கழுவிய போது டிபன் பாக்சின் மூடி கையில் இருந்து தவறி கிணற்றுக்குள் விழுந்தது. இதனையடுத்து அவன் தனது டிபன் பாக்சை கிணற்று படிக்கட்டில் வைத்து விட்டு கிணற்றுக்குள் விழுந்த டிபன் பாக்சின் மூடியை தாவி எடுக்க முயற்சி செய்தான்.

இதில் எதிர்பாராதவிதமாக தினேஷ்குமார் தவறி கிணற்றுக்குள் விழுந்தான். அவனுக்கு நீச்சல் தெரியாததால் கிணற்று தண்ணீருக்குள் மூழ்கினான். இதை பார்த்த சக மாணவர்கள் பள்ளி ஆசிரியர்களிடம் கூறினர். இதனையடுத்து பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் ஓடி வந்தனர். பின்னர் நீச்சல் தெரிந்த இளைஞர்கள் கிணற்றுக்குள் குதித்து மாணவனை தேடினர். நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர் மாணவன் தினேஷ்குமார் பிணமாக மீட்கப்பட்டான். இதைபார்த்து மாணவனின் பெற்றோர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

இந்நிலையில் தோகைமலை அருகே சின்னையம்பாளையம் ஊராட்சியில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் கலந்து கொண்டு விட்டு கலெக்டர் அன்பழகன் அந்த வழியாக காரில் சென்றார். அப்போது மாணவன் கிணற்றில் விழுந்து இறந்த தகவல் அவரிடம் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர் மாணவனின் உடலை மீட்டு உரிய நடவடிக்கை எடுக்க செல்போன் மூலம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.மேலும் அவர் சம்பவ இடத்திற்கு வந்து கிணற்றை பார்வையிட்ட பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்நிலையில் கலெக்டரின் உத்தரவின் பேரில் அங்கு வந்த மாவட்ட கல்வி அதிகாரி கபீர், கிருஷ்ணராயபுரம் வட்டார கல்வி அலுவலர்கள் குமுதா, சேகர் மற்றும் தோகைமலை போலீசார் இறந்த மாணவன் தினேஷ்குமாரின் உடலை ஆம்புலன்ஸ் வேனில் ஏற்ற முயன்றனர்.

அப்போது அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், கவுண்டம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளிக்கு குடிநீர் வசதி மற்றும் சுற்றுச்சுவர் கேட்டு பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தான் பள்ளி மாணவன் கிணற்றில் மூழ்கி இறந்துள்ளான் என குற்றம்சாட்டி ஆம்புலன்சில் மாணவனின் உடலை ஏற்றவிடாமல் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதனையடுத்து அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம், இறந்த மாணவன் குடும்பத்துக்கு ரூ. 1 லட்சம் நிதி உதவி மற்றும் பள்ளிக்கு குடிநீர் வசதியும், சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதன் பின் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

தொடர்ந்து மாணவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து மாணவனின் தந்தை சுரேஷ்குமார் அளித்த புகாரின் பேரில் தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story