போதை மாத்திரைகளை கரைத்து ஊசி மூலம் உடலில் செலுத்தும் இளைஞர்கள் வாலிபர் கைது


போதை மாத்திரைகளை கரைத்து ஊசி மூலம் உடலில் செலுத்தும் இளைஞர்கள் வாலிபர் கைது
x
தினத்தந்தி 18 July 2018 10:45 PM GMT (Updated: 18 July 2018 8:05 PM GMT)

திருச்சியில் போதை மாத்திரைகளை கரைத்து ஊசி மூலம் உடலில் இளைஞர்கள் செலுத்தி வருவது அதிகரித்துள்ளது. என்ஜினீயரை போதைக்கு அடிமையாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருச்சி,

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களான குட்கா, பான்பராக், புகையிலை திருச்சி மாநகரில் கள்ளத்தனமாக விற்பனை செய்யப்பட்டு கொண்டு தான் இருக்கிறது. சமீபத்தில் மாநகர போலீசார் ரோந்து பணியின் போது மொபட்டில் 3 மூட்டை போதைபொருட்கள் ஏற்றி வந்த 3 பேரை கைது செய்தனர்.

ஆனாலும், தொடர்ச்சியாக பல்வேறு கடைகளில் ரகசியமாக விற்பனை தொடர்கிறது. இந்த போதை பொருட்களுக்கு இளைஞர்கள் மட்டுமின்றி கல்லூரி மாணவர்களும் அடிமையாகி வருவதுதான் வேதனைக்குரியது. இதையறிந்த போலீசார் பள்ளி, கல்லூரி அருகில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தற்போது மருந்து கடைகளில் போதை மாத்திரைகளை வாங்கி, அதை தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் உடலில் செலுத்தி போதை ஏற்றிக்கொள்ளும் பழக்கம் இளைஞர்களிடையே தொற்றி கொண்டுள்ளது. கடந்த வாரம் திருச்சி சத்திரம் பஸ் நிலைய பகுதியில் வசித்து வந்த கோழிக்கறி கடை தொழிலாளியான அஜித்குமார் (வயது 20) என்பவருக்கு, அவரது நண்பர்கள் தர்மா, அருண் ஆகியோர் போதை மாத்திரையை தண்ணீரில் கரைத்து அதை ஊசி மூலம் வலுக்கட்டாயமாக அவரது இடது கையில் செலுத்தினர். இதனால், கை வீக்கம் அடைந்து தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டவருக்கு கையை துண்டிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் டாக்டரின் உரிய அனுமதி சீட்டு இல்லாமல் போதை மாத்திரை விற்பனை செய்ததாக மருந்துக்கடை ஊழியர்கள் வசந்தா, சுரேஷ்பாபு ஆகியோரை கோட்டை போலீசார் கைது செய்தனர்.

இந்தநிலையில் என்ஜினீயர் ஒருவருக்கு உடலில் போதை ஊசி செலுத்திய வழக்கில் வாலிபர் ஒருவரை உறையூர் போலீசார் கைது செய்துள்ளனர்.அதன் விவரம் வருமாறு:-

திருச்சி கரூர் பைபாஸ் சாலை பிரிமியர் டவர்ஸ் பகுதியில் வசிக்கும் ராஜகோபால் என்பவரது மகன் திலகன்(25). சிவில் என்ஜினீயரான இவர், முன்னணி செல்போன் நிறுவன வினியோகஸ்தராக உள்ளார். திலகனுக்கு உறையூர் செவந்திபிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த கவுரிசங்கர்(21) என்பவர் நட்பானார். கவுரிசங்கர், போதை மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து அதை ஊசி மூலம் இளைஞர்களுக்கு உடலில் செலுத்தி பணம் சம்பாதித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் திலகனுக்கு உடல் அசதியால் வலி எடுத்துள்ளது. எனவே, அதற்கான மாத்திரை வாங்க வேண்டும் என கவுரிசங்கரிடம் கூறி இருக்கிறார். அதற்கு கவுரிசங்கர், போதை மாத்திரைகளை கரைத்து ஊசி மூலம் உடலில் செலுத்தினாலே சொர்க்கத்துக்கு போவதுபோல இருக்கும். வலி பறந்து போய்விடும் என நைசாக பேசி இருக்கிறார். முதலில் மறுத்த அவர், பின்னர் அதற்கு சம்மதம் தெரிவித்து, போதை ஊசி போட தொடங்கினார்.

இந்தநிலையில் திலகனின் உடலில் மாற்றம் ஏற்பட்டதை பெற்றோர் உணர்ந்தனர். ஏன்? சோர்வாக இருக்கிறாய் என்று கேட்டதுடன், கையில் ஊசி குத்திய வடுக்களை கண்டதும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உண்மையை சொல்? என பெற்றோர் விசாரித்த போது நண்பர் கவுரிசங்கர் போதை ஊசி பழக்கத்துக்கு அடிமையாக்கி விட்டதாக கூறினார். இந்த பழக்கம் ஒரு மாதத்துக்கு மேலாக நீடித்ததாக கூறப்படுகிறது. பின்னர் உறையூர் போலீசில் திலகன் கொடுத்த புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து புத்தூர் அருணா தியேட்டர் கிரவுண்ட் அருகே கவுரிசங்கரை கைது செய்தார்.

திருச்சி மாநகரில் போதை மாத்திரைகளை கரைத்து அதை ஊசி மூலம் உடலில் செலுத்தும் கொடிய போதை பழக்கத்தால் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கும் பெற்றோர் இடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story