பஸ் நிறுத்தத்தில் 3 மாணவர்களிடம் சிக்கி பாலியல் கொடுமைக்கு ஆளான கல்லூரி மாணவி : ஒருவர் கைது


பஸ் நிறுத்தத்தில் 3 மாணவர்களிடம் சிக்கி பாலியல் கொடுமைக்கு ஆளான கல்லூரி மாணவி : ஒருவர் கைது
x
தினத்தந்தி 19 July 2018 3:45 AM IST (Updated: 19 July 2018 2:03 PM IST)
t-max-icont-min-icon

குளச்சல் அருகே பஸ் நிறுத்தத்தில் நின்ற சக கல்லூரி மாணவியை, 3 மாணவர்கள் பாலியல் சித்ரவதை செய்தனர். இதில் படுகாயமடைந்த மாணவி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மணவாளக்குறிச்சி,

குமரி மாவட்டம் இரணியல் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர், குளச்சல் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தினமும் கல்லூரிக்கு பஸ்சில் சென்று விட்டு மாலையில் வீடு திரும்புவது வழக்கம்.

இந்த நிலையில் வழக்கம்போல் கல்லூரிக்கு சென்றிருந்தார். பின்னர், மாலை கல்லூரி முடிந்ததும் வீடு திரும்புவதற்காக தனது தோழியுடன் கருமன்கூடல் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது, மாணவியுடன் அதே கல்லூரியில் படித்து வரும் வெள்ளிச்சந்தை அருகே செதுவூர் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (வயது 20), கழுவன்திட்டவிளை சுதன் (20), ஆரோக்கியபுரம் ராஜாசிங் (20) ஆகிய 3 பேர் அங்கு வந்தனர்.

பின்னர் மாணவியை கேலி, கிண்டல் செய்ததுடன் திடீரென நடுரோட்டில் வைத்து பாலியல் சித்ரவதை செய்தனர். மேலும் அவரை கீழே தள்ளி விட்டனர். இதில் படுகாயமடைந்த மாணவி மயங்கி கீழே விழுந்தார். இதை தட்டிக்கேட்ட தோழியையும் அவர்கள் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

பாலியல் கொடுமைக்கு ஆளானதில் படுகாயமடைந்த மாணவியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து குளச்சல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மாணவியின் தாயார் புகார் செய்தார்.

அதன் பேரில் விக்னேஷ், சுதன், ராஜாசிங் ஆகிய 3 பேர் மீதும் போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடினர். இதில் ராஜாசிங்கை போலீசார் கைது செய்தனர். பஸ் நிறுத்தத்தில் 3 சக கல்லூரி மாணவர்களிடம் சிக்கி, மாணவி பாலியல் சித்ரவதை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story