கூடுதலாக துப்புரவு தொழிலாளர்கள் நியமனம் மாநகராட்சி அதிகாரிகளுக்கு மேயர் சம்பத்ராஜ் எச்சரிக்கை


கூடுதலாக துப்புரவு தொழிலாளர்கள் நியமனம் மாநகராட்சி அதிகாரிகளுக்கு மேயர் சம்பத்ராஜ் எச்சரிக்கை
x
தினத்தந்தி 19 July 2018 4:00 AM IST (Updated: 19 July 2018 3:10 AM IST)
t-max-icont-min-icon

கூடுதலாக துப்புரவு தொழிலாளர்களை நியமனம் செய்த மாநகராட்சி அதிகாரிகளுக்கு மேயர் சம்பத்ராஜ் எச்சரிக்கை விடுத்தார்.

பெங்களூரு, 

கூடுதலாக துப்புரவு தொழிலாளர்களை நியமனம் செய்த மாநகராட்சி அதிகாரிகளுக்கு மேயர் சம்பத்ராஜ் எச்சரிக்கை விடுத்தார்.

சம்பளம் கொடுக்கவில்லை

மேயர் சம்பத்ராஜ் எலகங்கா மண்டல அலுவலகத்தில் நேற்று அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டத்தை நடத்தினார். அப்போது அங்கு வந்த துப்புரவு தொழிலாளர்கள், “கடந்த 6 மாதங்களாக எங்களுக்கு சம்பளம் கொடுக்கவில்லை. விடுமுறை கொடுப்பது இல்லை. பெண் தொழிலாளர்களுக்கு பிரசவ கால விடுப்பும் வழங்குவது இல்லை. பிரசவத்திற்கு சென்றுவிட்டால் அந்த பெண்களை வேலையில் இருந்து நீக்கிவிடுகிறார்கள். கூடுதலாக உள்ள துப்புரவு தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்கக்கூடாது“ என்று புகார் தெரிவித்தனர்.

அப்போது மேயர் சம்பத்ராஜ், எலகங்கா மண்டலத்தில் எத்தனை துப்புரவு தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். கூடுதலாக எத்தனை பேர் உள்ளனர் என்பது பற்றி அதிகாரிகளிடம் இருந்து விவரங்களை கேட்டு பெற்றார். தேவையை விட கூடுதலாக துப்புரவு தொழிலாளர்களை நியமித்தது ஏன் என்றும், இதற்கு அதிகாரிகளே காரணம் என்று கூறி மேயர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

மேயர் எச்சரிக்கை

மேலும் பேசிய அவர், “எந்த அடிப்படையில் கூடுதல் எண்ணிக்கையில் துப்புரவு தொழிலாளர்களை நியமித்தீர்கள். அதுபற்றி எங்கள் கவனத்திற்கு அதிகாரிகள் கொண்டு வராதது ஏன்?. கடந்த 6 மாதங்களாக அந்த தொழிலாளர்களுக்கு சம்பளமும் வழங்கவில்லை“ என்று கூறினார். மேலும் கூடுதலாக துப்புரவு தொழிலாளர்களை நியமித்த வி‌ஷயத்தில் பொறுப்பற்ற முறையில் செயல்படும் அதிகாரிகளுக்கு மேயர் எச்சரிக்கை விடுத்தார்.


Next Story