மணல் கடத்தல்; 6 லாரிகள் பறிமுதல் ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் அபராதம்


மணல் கடத்தல்; 6 லாரிகள் பறிமுதல் ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் அபராதம்
x
தினத்தந்தி 19 July 2018 3:45 AM IST (Updated: 19 July 2018 3:34 AM IST)
t-max-icont-min-icon

வேப்பனப்பள்ளி அருகே மணல் கடத்திய 6 லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து, ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.

வேப்பனப்பள்ளி,

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள தீர்த்தம் கிராமத்தில் இருந்து பேரிகை வழியாக, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களுக்கு கிரானைட் கற்கள், மணல் கடத்தி செல்வதாக மாவட்ட கனிமவளத்துறைக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் கிருஷ்ணகிரி புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை இயக்குனர் சுரேஷ் தலைமையில், உதவி புவியியல் அலுவலர் சத்தியசீலன், கனிமவளத்துறை வருவாய் ஆய்வாளர் முருகேசன், உதவியாளர் வடிவழகன் மற்றும் அதிகாரிகள் வேப்பனப்பள்ளி அருகே உள்ள தீர்த்தம் பகுதியில் நேற்று அதிகாலை வாகன சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த 6 லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ராமன்தொட்டி பகுதியில் இருந்து மணல் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 6 லாரி களையும் அதிகாரிகள் பறி முதல் செய்து வேப்பனப்பள்ளி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

மேலும், ஒவ்வொரு லாரிக்கும் தலா ரூ.60 ஆயிரம் வீதம் ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதுகுறித்து துணை இயக்குனர் சுரேஷ் கூறும்போது, மணல், கிரானைட் கற்கள் கடத்தலை தடுக்க வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மணல், கிரானைட் கற்கள் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். 

Next Story