விபத்துகளை குறைப்பது குறித்த கலந்தாய்வு கூட்டம்


விபத்துகளை குறைப்பது குறித்த கலந்தாய்வு கூட்டம்
x
தினத்தந்தி 18 July 2018 10:05 PM GMT (Updated: 18 July 2018 10:05 PM GMT)

மாவட்டம் முழுவதும் விபத்துகளை குறைப்பது குறித்து கடலூரில் கலந்தாய்வு கூட்டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில் நடந்தது.

கடலூர், 


கடலூர் மாவட்டத்தில் விபத்துகளை குறைத்து, உயிரிழப்பை தடுப்பது குறித்து போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஒருங்கிணைந்த கலந்தாய்வு கூட்டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமை தாங்கினார்.

இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் வேதரத்தினம், வீரராகவன், கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மணி, இளமுருகன், மாநில நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ரமேஷ், தேசிய நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சுந்தரி, இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய தொழில்நுட்ப மேலாளர் பகவத்சிங், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் தாமோதரன் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து மாவட்டத்தில் அடிக்கடி விபத்து ஏற்படும் இடங்கள், அதை சரி செய்ய என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

இது பற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் கூறியதாவது:-

மாவட்டத்தில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு மரணம் ஏற்படும் இடங்கள், ஒரே இடத்தில் 3 விபத்து வழக்குகள், 5க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்த இடங்கள், குறுகிய பாலங்கள், வளைவுகள் கண்டறியப்பட்டு, அந்த இடங்கள் விபத்து கரும்புள்ளி இடங்களாக கண்டறியப்பட்டுள்ளது.

இதன்படி மாவட்டத்தில் மொத்தம் 63 இடங்கள் விபத்து கரும்புள்ளி இடங்களாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த இடங்களில் வேகத்தடை, எச்சரிக்கை பலகை வைப்பது, குறுகலான சாலைகளை விரிவாக்கம் செய்வது, மின்விளக்கு இல்லாத இடங்களில் உயர்கோபுர மின் விளக்கு அமைக்க வேண்டும். நடைபாதையில் பாதசாரிகள் நடப்பதற்கு வரிகோடுகள் அமைக்க வேண்டும் போன்ற பல்வேறு விபத்து தடுப்பு நடவடிக்கைகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கூறி இருக்கிறோம். அவர்கள் உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர் என்றார்.

இதேபோல் சுகாதாரத்துறை சார்பில், குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றிச்செல்லும் டிரைவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்வது, வாகன உரிமத்தை ரத்து செய்வது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது. 

Next Story