சத்துணவு திட்டத்துக்கு முட்டை வழங்குவதை எந்த சூழலிலும் நிறுத்த மாட்டோம்


சத்துணவு திட்டத்துக்கு முட்டை வழங்குவதை எந்த சூழலிலும் நிறுத்த மாட்டோம்
x
தினத்தந்தி 19 July 2018 4:30 AM IST (Updated: 19 July 2018 3:42 AM IST)
t-max-icont-min-icon

தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கு முட்டை வழங்குவதை எந்த சூழலிலும் நிறுத்த மாட்டோம் என தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளனம் அறிவித்து உள்ளது.

நாமக்கல்,

தமிழ்நாடு முட்டை கோழிப்பண்ணையாளர்கள் சம்மேளன நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நாமக்கல்லில் அதன் தலைவர் முத்துசாமி தலைமையில் நடந்தது. சம்மேளனத்தின் துணைத்தலைவரும், மார்க்கெட்டிங் சொசைட்டியின் தலைவருமான வாங்கிலி சுப்பிரமணியம், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு நாமக்கல் மண்டல தலைவர் டாக்டர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்துக்கு பிறகு வாங்கிலி சுப்பிரமணியம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சத்துணவு திட்டத்துக்கு முட்டை வழங்குவதை எந்த சூழலிலும் பண்ணையாளர்கள் நிறுத்த மாட்டோம். முட்டை வினியோகத்தை நிறுத்தாமல் எங்கள் கோரிக்கையை அரசிடம் தொடர்ந்து வலியுறுத்துவோம். சத்துணவு திட்ட முட்டை கொள்முதலில், 5 ஆண்டுகளுக்கு முன்பு, மாவட்ட வாரியாக இருந்த மாதாந்திர டெண்டர் நடைமுறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.

சமீபத்தில் நடந்த சத்துணவு முட்டை கொள்முதல் டெண்டர் ரத்து செய்யப்பட்ட நிலையில், இப்போது நடைமுறையில் உள்ள டெண்டர் இந்த மாதம் 31-ந் தேதியுடன் முடிவடைவதால், அரசு இப்போதுள்ள நிறுவனத்துக்கு கால நீட்டிப்பு அளித்தாலும், தொடர்ந்து பண்ணையாளர்கள் முட்டை வழங்குவோம். பண்ணையாளர்களின் கோரிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அல்லது சம்பந்தப்பட்ட துறை அமைச்சரை நேரில் சந்தித்து மனு அளிக்க முடிவு செய்துள்ளோம்.

இப்போது சத்துணவு திட்டத்துக்கு முட்டை வினியோகம் செய்யும் கிறிஸ்டி நிறுவனம் பண்ணையாளர்களுக்கு வழங்கவேண்டிய தொகையை காலதாமதம் இல்லாமல் வழங்கி வருகிறது. இந்த நிறுவனம் பண்ணையாளர்களுக்கு சுமார் ரூ.31 கோடி வழங்க வேண்டி உள்ளது. அதில் நீண்டகால நிலுவை என்பது ரூ.11 கோடி மட்டுமே. அந்த நிறுவனத்தில் நடந்த வருமான வரி சோதனையால்தான் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளது.

கிறிஸ்டி நிறுவனத்துக்கு பண்ணையாளர்கள் யாரும் ரூ.2-க்கு குறைவாக முட்டை வழங்கவில்லை. அந்தந்த வாரத்திற்கான சந்தை நிலவரத்தை பொறுத்து, தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயிக்கும் விலையில் இருந்து 40 முதல் 60 பைசா வரை குறைத்து சத்துணவு திட்டத்துக்கு முட்டை விற்பனை செய்து வருகிறோம். இப்போது ரூ.4-க்கு முட்டையை வழங்கி வருகிறோம்.

இப்போதுள்ள நிலையில் முட்டை டெண்டர் காலத்தை நீட்டித்தால் அரசுக்கு லாபம்தான். முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், டெண்டர் எடுத்த நிறுவனம் 4 ரூபாய் 34 காசுகள்தான் அரசிடம் இருந்து பெறமுடியும். டெண்டர் நிர்ணய விலையை காட்டிலும், முட்டை விலை உயரும் பட்சத்தில் அந்த நிறுவனத்துக்கு நஷ்டம்தான் ஏற்படும்.

மாவட்ட வாரியான டெண்டர் முறை அமல்படுத்தப்பட்டாலும் ஆண்டு முழுவதும் ஒரே விலையில் முட்டை வினியோகம் செய்ய முடியாது. பண்ணையாளர்கள் இதற்கு தயாராக இருக்கமாட்டார்கள்.

20-ந் தேதி (நாளை) தொடங்கும் லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கிறோம். அரசின் கொள்கைகளால் லாரி உரிமையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு, லாரிகளை இயக்குபவர்கள் என்ற முறையில் எங்களுக்கும் இருக்கிறது. போராட்டம் தொடங்கிய முதல் இரண்டு நாட்கள் மட்டும் முட்டை லாரிகளை இயக்க மாட்டோம்.

அதன்பிறகும் போராட்டம் நீடித்தால் சத்துணவு திட்டத்துக்கு முட்டை ஏற்றிச்செல்லும் லாரிகள், பிற மாநிலங்களுக்கு முட்டை மற்றும் கோழிகளை ஏற்றிச்செல்லும் லாரிகளுக்கு போராட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கவேண்டும் என லாரி உரிமையாளர்கள் சங்கத்தை கேட்போம். இவ்வாறு அவர் கூறினார். 

Next Story