தபால்தலை சேகரிப்பில் ஆர்வமுள்ள 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித்தொகை
தபால்தலை சேகரிப்பில் ஆர்வம் உள்ள 6 முதல் 9-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் உதவித்தொகை பெற வருகிற 30-ந்தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அதிகாரி தெரிவித்து உள்ளார்.
கடலூர்,
கடலூர் கோட்ட அஞ்சலகங்களின் கண்காணிப்பாளர் சிவபிரகாசம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தபால் தலை சேகரிப்பில் ஆர்வம் உள்ள 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வருடாந்திர உதவித்தொகை வழங்கும் திட்டம் இந்திய தபால் துறையால் கடந்த நிதி ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் மாணவர்கள் ரூ.200 மதிப்புள்ள தபால் தலை சேகரிப்பு வைப்பு கணக்கு வைத்திருக்க வேண்டும் அல்லது பள்ளியில் தபால்தலை சேகரிப்போர் கிளப்பில் உறுப்பினராக இருக்க வேண்டும். இத்திட்டத்தில் பயன்பெறும் மாணவர்களின் ஆண்டு தேர்ச்சி விகிதம் 60 சதவீதத்துக்கு மேல் இருக்க வேண்டும்.
இத்திட்டத்தில் பயன்பெறும் மாணவரின் தேர்ச்சி 2 சுற்றுகளால் நிர்ணயிக்கப்படும். முதல் சுற்று தபால் தலை சேகரிப்பு தொடர்பான எழுத்து மற்றும் வினாடி-வினா போட்டி திருச்சி மண்டல அளவில் நடைபெறும். அதில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் இறுதி தேர்வுக்கு தபால் துறையால் கொடுக்கப்படும் ஏதேனும் ஒரு தலைப்பில் தபால் தலை சேகரிப்பு சார்ந்த ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்க வேண்டும். இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாதம் ரூ.500 வீதம் வருடாந்திர உதவித்தொகையாக 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இந்த ஆண்டுக்கான உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்கள் அருகில் உள்ள தபால் நிலையத்துக்கு சென்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்து 30-ந்தேதிக்குள் அஞ்சலகங்களின் கண்காணிப்பாளர், கடலூர் கோட்டம், கடலூர்-607001 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இத்திட்டத்தில் கடலூர் கோட்டத்தில் உள்ள அனைத்து மாணவர்களும் சேர்ந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Related Tags :
Next Story