வேலை வழங்கக்கோரி சுமைப்பணி தொழிலாளர்களின் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்


வேலை வழங்கக்கோரி சுமைப்பணி தொழிலாளர்களின் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்
x
தினத்தந்தி 20 July 2018 4:30 AM IST (Updated: 19 July 2018 9:53 PM IST)
t-max-icont-min-icon

புதிய வெங்காய மண்டியில் வேலை வழங்கக்கோரி சுமைப்பணி தொழிலாளர்களின் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தினார்கள். கலெக்டர் அலுவலகத்தில் 23–ந் தேதி கஞ்சித்தொட்டி திறக்கும் போராட்டம் நடத்த உள்ளனர்.

திருச்சி,

திருச்சி காந்திமார்க்கெட் அருகே சப்–ஜெயில்ரோட்டில் பல ஆண்டுகளாக வெங்காய கமி‌ஷன் மண்டி இயங்கி வந்தது. அங்கு சுமைப்பணி தொழிலாளர்கள் ஏராளமானோர் வேலை பார்த்து வந்தனர். இந்தநிலையில் கடந்த ஜூன் மாதம் 3–ந் தேதி முதல் திருச்சி–சென்னை பைபாஸ்ரோட்டில் பழைய பால்பண்ணை அருகே வெங்காய மண்டி இடமாற்றம் செய்யப்பட்டது. புதிய வெங்காய மண்டியில் சுமைதூக்கும் பணிக்கு புதிய தொழிலாளர்களை மண்டி உரிமையாளர்கள் நியமித்தனர். இதனால் பழைய மண்டியில் வேலை பார்த்து வந்த 277 தொழிலாளர்கள் வேலை இழந்தனர். இதனை தொடர்ந்து புதிய மண்டியில் தங்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து சுமைப்பணி தொழிலாளர்கள் குடும்பத்துடன் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 12–ந் தேதி மன்னார்புரத்தில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் உதவி ஆணையர் லிங்கம் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. அதில் உடன்பாடு ஏற்படவில்லை. அதன்பிறகு கடந்த 17–ந் தேதி மீண்டும் சுமைப்பணி தொழிலாளர் சங்க கூட்டமைப்பு, வெங்காய மண்டி வியாபாரிகள், வெங்காய மண்டி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. அதிலும் உடன்பாடு ஏற்படாத நிலையில் வருகிற 27–ந் தேதி(வெள்ளிக்கிழமை) அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.


இந்தநிலையில் இந்த விவகாரம் குறித்து சுமைப்பணி தொழிலாளர்கள் தரப்பில் காந்திமார்க்கெட்டில் அவசர ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் ராஜா, தொ.மு.ச. மாவட்ட செயலாளர் ராமலிங்கம், சி.ஐ.டி.யு. குணசேகரன், ராமர் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில், வெங்காய மண்டியில் வேலை இழந்து பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் 277 பேருக்கும் உடனடியாக பணி வழங்க வேண்டும். இந்த பிரச்சினையில் கலெக்டர் தலையிட்டு தீர்வு காண வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி அனைத்து தொழிலாளர்களின் வீடுகள், வெங்காய மண்டி கடைகள், மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்துவது“ என முடிவு செய்யப்பட்டது.

அதன்படி நேற்று காலை தாராநல்லூர், ஜீவாநகர், கீரைக்கடை பஜார், காமராஜர்நகர், வடக்குதாராநல்லூர், மீன்மார்க்கெட், பழக்கடை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் தொழிலாளர்களின் வீடுகள் மற்றும் அவர்களுடைய உறவினர்களின் வீடுகள், வெங்காய மண்டி கடைகள், காந்தி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டது. இது குறித்து சுமைப்பணி தொழிலாளர் சங்க(சி.ஐ.டி.யு.) மாவட்ட செயலாளர் ராமர் கூறுகையில், “கருப்புக்கொடி ஏற்றிய பிறகும் தீர்வு கிடைக்காவிட்டால், வருகிற 23–ந் தேதி(திங்கட்கிழமை) காலை கலெக்டர் அலுவலகத்துக்கு சுமைப்பணி தொழிலாளர்கள் திரண்டு வந்து கஞ்சித்தொட்டி திறக்கும் போராட்டம் நடத்தப்படும்“ என்றார்.

Next Story