திருச்சி மாவட்டத்தில் ரூ.3 கோடியே 33 லட்சம் செலவில் 43 வாய்க்கால்கள் தூர்வாரும் பணி கலெக்டர் ஆய்வு


திருச்சி மாவட்டத்தில் ரூ.3 கோடியே 33 லட்சம் செலவில் 43 வாய்க்கால்கள் தூர்வாரும் பணி கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 19 July 2018 10:45 PM GMT (Updated: 19 July 2018 4:52 PM GMT)

திருச்சி மாவட்டத்தில் ரூ.3 கோடியே 33 லட்சம் செலவில் 43 வாய்க்கால்கள் தூர்வாரும் பணி நடந்து வருகிறது. இதனை மண்டல கண்காணிப்பு அதிகாரி மற்றும் கலெக்டர் நேரில் ஆய்வு செய்தனர்.

திருச்சி,

திருச்சி, தஞ்சாவூர் மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் நீர்வள ஆதாரத்துறையின் திருச்சி ஆற்றுப்பாதுகாப்பு கோட்டத்தினால் நடப்பு ஆண்டு 43 வாய்க்கால்கள் ரூ.3 கோடியே 33 லட்சம் செலவில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை கண்காணிக்க மாநில அளவில் உயர்அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பாசனத்திற்காக வாய்காலின் கடைமடை பகுதிகளில் தண்ணீர் செல்வதை ஆய்வு செய்கின்றனர்.

அதன்படி நேற்று மண்டல கண்காணிப்பு அலுவலரும், தோட்டக்கலைதுறை இயக்குனருமான டாக்டர் என்.சுப்பையன், மாவட்ட கலெக்டர் ராஜாமணி ஆகியோர் திருச்சி உய்யகொண்டான் வாய்க்கால், தொட்டியம் சின்னவாய்க்கால், வடகரை வாய்க்கால் தூர்வாரும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


 மேலும், மண்ணச்சநல்லூர் கோரை வாய்க்கால், பெருவளை வாய்க்கால், பங்குனிவாய்க்கால் தூர்வாரும் பணியினையும், லால்குடி வட்டத்தில் நடைபெற்று வரும் மலட்டாறு வாய்க்கால், கோமாகுடி வாய்க்கால் ஆகிய இடங்களில் தூர்வாரும் பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக முக்கொம்பில் விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள், பொதுமக்கள் ஆகியோரிடம் கலந்துரையாடி அவர்களின் கருத்துகளை டாக்டர்.என்.சுப்பையன் கேட்டறிந்தார்.

 ஆய்வின்போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்கள் டி.பி.கணேசன் (ஆற்றுப் பாதுகாப்பு கோட்டம்),செல்வராஜ்(அரியாறு கோட்டம்), உதவி செயற்பொறியாளர் தினேஷ் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Next Story