தாலுகா அலுவலகத்தை உறவினர்கள் முற்றுகை;45 பேர் கைது மாணவன் சாவில் மர்மம் இருப்பதாக கூறி போராட்டம்


தாலுகா அலுவலகத்தை உறவினர்கள் முற்றுகை;45 பேர் கைது மாணவன் சாவில் மர்மம் இருப்பதாக கூறி போராட்டம்
x
தினத்தந்தி 20 July 2018 3:15 AM IST (Updated: 20 July 2018 12:14 AM IST)
t-max-icont-min-icon

பள்ளி மாணவன் சாவில் மர்மம் இருப்பதாக கூறி, கயத்தாறு தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

கயத்தாறு, 

பள்ளி மாணவன் சாவில் மர்மம் இருப்பதாக கூறி, கயத்தாறு தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 45 பேரை போலீசார் கைது செய்தனர்.

கிணற்றில் மாணவன் பிணம்

கயத்தாறு அருகே தெற்கு மயிலோடையைச் சேர்ந்த பீட்டர் மகன் உடையார் (வயது 16). இவன், கயத்தாறில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 16-ந்தேதி மாலையில் பள்ளிக்கூடம் அருகில் உள்ள கிணற்றில் உடையார் மர்மமான முறையில் பிணமாக மிதந்தான். இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், மதிய உணவு இடைவேளையில் வகுப்பறையில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில், உடையார் மற்றொரு மாணவனை தாக்கினான். இதில் அந்த மாணவன் மயங்கி விழுந்ததால், அவனுக்கு கயத்தாறு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையே உடையாரை ஆசிரியர்கள் கண்டித்தனர். மேலும் தாக்கப்பட்ட மாணவன் இறந்து விட்டால், தன்னை போலீசார் கைது செய்து விடுவார்கள் என்று அச்சம் அடைந்த உடையார், கிணற்றில் குதித்து தற்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

தாலுகா அலுவலகம் முற்றுகை

வகுப்பறையில் உள்ள கண்காணிப்பு கேமராவில், உடையார் சக மாணவனை தாக்கியது பதிவாகி உள்ளது. எனவே அதற்கு பின்னர் பள்ளிக்கூட வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைக் காண்பிக்க வேண்டும். பள்ளிக்கூட நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், உடையாரின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி, உடையாரின் பெற்றோர், உறவினர்கள், கிராம மக்கள் நேற்று காலையில் கயத்தாறு தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

முற்றுகையிட்டவர்களிடம் கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், மண்டல துணை தாசில்தார் கண்ணன் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து அனுமதியின்றி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதாக உடையாரின் பெற்றோர், உறவினர்கள் உள்ளிட்ட 45 பேரை கயத்தாறு போலீசார் கைது செய்து, அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Next Story