குற்றவாளிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் போலீசாருக்கு டி.ஜி.பி. உத்தரவு


குற்றவாளிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் போலீசாருக்கு டி.ஜி.பி. உத்தரவு
x
தினத்தந்தி 19 July 2018 10:00 PM GMT (Updated: 19 July 2018 6:49 PM GMT)

குற்றவாளிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று போலீசாருக்கு டி.ஜி.பி. சுந்தரி நந்தா உத்தரவிட்டுள்ளார்.

வில்லியனூர்,

புதுவை மாநில டி.ஜி.பி.யாக புதிதாக பொறுப்பேற்றுள்ள சுந்தரி நந்தா கிராமப்புறங்களில் உள்ள போலீஸ் நிலையங்களில் ஆய்வு நடத்தி வருகிறார். அதன்படி நெட்டப்பாக்கம் போலீஸ் நிலையத்தை நேற்று ஆய்வு செய்தார்.

போலீஸ் நிலையத்தில் பராமரிக்கப்படும் குற்றப்பதிவேடுகள், ஆவணங்களை சுந்தரி நந்தா பார்வையிட்டார். மேலும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள முக்கிய வழக்குகளின் விவரங் களை கேட்டறிந்தார். பின்னர் குற்றவாளிகள் அடைக்கப் படும் அறைகளை பார்வையிட்டார்.

இதனை தொடர்ந்து நெட்டப்பாக்கம் போலீஸ் சரகம் மடுகரை புறக்காவல் நிலையத்துக்கு சுந்தரி நந்தா சென்றார். அங்கு போலீசாரிடம் குறைகள் கேட்டார். அப்போது, குற்றவாளிகள் மீது பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர் உத்தரவிட்டார்.

பின்னர் திருபுவனை போலீஸ் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு வந்திருந்த பொதுமக்கள், இரவு நேரங்களில் அதிகளவில் போலீசாரை ரோந்து பணியில் ஈடுபடுத்தவேண்டும், முக்கிய சந்திப்புகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதுபற்றி நடவடிக்கை எடுப் பதாக டி.ஜி.பி. சுந்தரி நந்தா உறுதி கூறினார்.

மதகடிப்பட்டு நரிக்குறவர்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் டி.ஜி.பி.யை சந்தித்து, தாங்கள் குடியிருக்கும் பகுதியில் இரவு நேரத்தில் மர்ம நபர்கள் மது குடித்துவிட்டு பாட்டில்களை வீசிச் செல்கின்றனர். இதனால் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை. எனவே பாதுகாப்பாக வசிக்க இலவச வீட்டுமனை வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதுபற்றி நடவடிக்கை எடுக்கப்படும் டி.ஜி.பி. சுந்தரி நந்தா கூறினார். ஆய்வினை தொடர்ந்து பள்ளி மாணவர்களின் பிளாஸ்டிக் ஒழிப்பு, பெண் குழந்தை பாதுகாப்பு மற்றும் பாலியல் தொல்லை குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தை டி.ஜி.பி. தொடங்கிவைத்தார்.

ஆய்வின்போது மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், சப்-இன்ஸ்பெக்டர்கள் நந்த குமார், முருகன், பிரியா, பிரதாபன் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story