விவசாயம் உள்ளிட்ட பணிகளுக்கு கிராவல் மண் அள்ள அனுமதி வழங்குவதில் குளறுபடி


விவசாயம் உள்ளிட்ட பணிகளுக்கு கிராவல் மண் அள்ள அனுமதி வழங்குவதில் குளறுபடி
x
தினத்தந்தி 19 July 2018 10:45 PM GMT (Updated: 19 July 2018 6:53 PM GMT)

விவசாயம் மற்றும் இதர பணிகளுக்காக கிராவல் மண் அள்ள அனுமதி கேட்கும் போது குளறுபடி நிலவுவதால் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிவகாசி,

மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீர் நிலைகளில் அதிக அளவில் கிராவல் மண் இருப்பதால் மழைக்காலங்களில் வரும் தண்ணீர் தேங்க முடியாமல் வீணாகி வந்தது. இந்த நிலையில் நீர் நிலைகளில் உள்ள கிராவல் மண்ணை எடுக்க மாநில அரசு விவசாயிகள் மற்றும் மண்பாண்டம் செய்பவர்களுக்கு அனுமதி அளித்தது.

இந்த நிலையில் தாலுகா அலுவலகங்களில் கடந்த காலங்களில் விவசாயம் மற்றும் இதர பணிகளுக்கு கிராவல் மண் அள்ள அனுமதி கேட்டு விண்ணப்பித்தால் வருவாய்த்துறை அதிகாரிகள் உரிய விசாரணைக்கு பின்னர் அனுமதி அளித்து வந்தனர். இதன் பயனாக பல நீர்நிலைகள் அரசு செலவு இல்லாமல் தூர்வாரப்பட்டது.


சில தாலுகா அலுவலகத்தில் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கிராவல் மண் அள்ள அனுமதி கேட்டால் தற்போது உரிய அனுமதி வழங்கப்படுவதில்லை. ஆனால் இவ்வாறு அனுமதி கிடைக்காதவர்கள் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் அனுமதி கேட்டு மனு செய்து உரிய அனுமதி பெற்று கிராவல் மண் அள்ளி செல்கிறார்கள். இதை சுட்டிக்காட்டி தாலுகா அலுவலகத்தில் மீண்டும் விண்ணப்பித்தாலும் அதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. கிராவல் மண் அள்ள வருவாய்த்துறை அதிகாரிகள் தான் அனுமதி வழங்க வேண்டும் என்ற நிலை இருக்கும் போது தாசில்தார் அனுமதி மறுப்பதும், ஆர்.டி.ஓ. அனுமதி கொடுப்பதும் பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.


எனவே மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதி மக்களும் பயன்பெறும் வகையில் அனைத்து தாசில்தார்களும், கிராவல் மண் அள்ள அனுமதி கேட்டு மனு கொடுப்பவர்களின் மனுக்களை பெற்று உரிய விசாரணைக்கு பின்னர் தகுதி இருந்தால் அவர்களுக்கு உரிய அனுமதி அளிக்க மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். மேலும் அனுமதி பெற்று கிராவல் மண் அள்ளுவதை ஊக்குவித்தால் தான் திருட்டுத்தனமாக கிராவல் மண் அள்ளும் சம்பவங்கள் குறையும். எனவே மாவட்ட நிர்வாகம் இதில் உரிய உத்தரவுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் பட்டதாரி பிரிவு மாநில பொதுச்செயலாளர் திருத்தங்கல் மைக்கேல், மாவட்ட நிர்வாகத்துக்கு மனுவும் அனுப்பி உள்ளார்.

Next Story